அம்பாறை – போதைப்பொருள் அச்சுறுத்தலை நிவர்த்தி செய்வதற்கான பயனுள்ள மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் அவசியம் என்பதை வலியுறுத்தும் வகையில் விசேட கலந்துரையாடல் ஒன்று அண்மையில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் அம்பாறை மாவட்டம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல மற்றும் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.டி.வி. கஸ்தூரியாரச்சி ஆகியோர் கலந்து கொண்டு போதைப்பொருள் பரவல் நிலைமை, இளைஞர்கள் மத்தியில் ஏற்படும் தாக்கங்கள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக விரிவான விளக்கங்களை வழங்கினர்.
போதைப்பொருள் விநியோக வலையமைப்புகளை முறியடிக்க சமூகத்தின் ஒத்துழைப்பு அவசியம் என்பதையும், பெற்றோர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அதிகாரிகள் வலியுறுத்தினர்.
மேலும், தகவல் வழங்கும் மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
சமூக அமைப்புகள், மத தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து செயல்பட்டாலே போதைப்பொருள் அச்சுறுத்தலை கட்டுப்படுத்த முடியும் எனவும் இக்கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கப்பட்டது








