தங்களின் 08 கோரிக்கைகளுக்கு தீர்வுகள் வழங்கப்படாவிட்டாலோ, இலங்கை மின்சார சபையைக் கலைப்பதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டாலோ, க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் முடிவடைந்தவுடன் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்று, இலங்கை மின்சார சபையின் தொழிற் சங்கங்கள் அரசாங்கத்தை மீண்டும் எச்சரித்துள்ளன.
தங்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல் – சட்டவிரோத மறுசீரமைக்கும் தவறான முடிவு எடுக்கப்பட்டால், அடுத்த 48 மணி நேரத்திற்குள், விருப்பமில்லாமலும் கூட, இந்த முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
ஊழியர் பிரச்சினைகள் மற்றும் எரிசக்தி பிரச்சினைகள் புறக்கணிக்கப்பட்டு, சரியான எரிசக்தி கொள்கை நிறுவப்படாமல், ஒரு வர்த்தமானி அறிவிப்பு தன்னிச்சையாக வெளியிடப்பட்டால், முன் அறிவிப்பின்றி இந்த முடிவை நிச்சயமாக எடுப்போம் என்று தொழிற்சங்கங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.
அவ்வாறு எடுக்கப்படும் கடுமையான முடிவு, நாட்டையும் குடிமக்களையும் கடுமையாக பாதிக்கும் என்றும், அதற்குரிய முழைப்பொறுப்பையும் முழுப் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்க வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
மாணவர்கள் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதும் போது இதுபோன்ற நடவடிக்கையை மேற்கொள்ளத் தயாராக இல்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில், நிர்வாகக் குழு உறுப்பினர் பொறியாளர் சந்தருவன் மஞ்சநாயக்க, தொழில்நுட்ப பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கத்தின் பிரதித் தலைவர் நந்தன உதய குமார, மின் தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் கோசல அபேசிங்க, சுயாதீன தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பிரபாத் பிரியந்த உள்பட இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்த விடயங்களைத் தெரிவித்தனர்





