Thursday, September 17, 2026
Your AD Here

கல்முனை பொலிஸ் நிலையத்தில் மோதல்; ஐவருக்கு கடூழியச் சிறை!

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தினுள் வைத்து மீண்டும் மோதலில் ஈடுபட்டு அமைதிக்குப் பங்கம் விளைவித்த குடும்பத் தகராறுடன் தொடர்புடைய ஐவருக்கு தலா 300 ரூபா அபராதமும் 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு மாத கடூழியச் சிறைத்தண்டனையும் விதித்துக் கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (19) கல்முனை புறநகர்ப் பகுதியைச் சேர்ந்த இரு தரப்பினரிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு தொடர்பில் விசாரணைக்காக அவர்கள் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.அங்கு வாக்குமூலங்களைப் பதிவுசெய்த பின்னர் இரு தரப்பினரும் சமாதானமாகச் செல்ல இணக்கம் தெரிவித்தனர்.

இதனையடுத்து பொலிஸ் நிலையத்தின் பல்வேறு குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் கே.எல்.எம் முஸ்தபா இவர்களை தலைமையகப் பொறுப்பதிகாரியின் அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அவ்வாறு அழைத்துச் செல்லப்பட்ட போது பொலிஸ் நிலைய வளாகத்திற்குள்ளேயே பொதுமக்களும் ஏனையோரும் வேடிக்கை பார்க்கும் வகையில் இரு தரப்பினரும் மீண்டும் தகராறில் ஈடுபட்டு மோதிக்கொண்டனர்.இதனை அவதானித்த கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த களுவாராய்ச்சி பொது இடத்தில் அமைதிக்குப் பங்கம் விளைவித்த குற்றத்திற்காக இரு தரப்பையும் சேர்ந்த 5 பேரையும் உடனடியாகக் கைது செய்து நீதிமன்ற உத்தரவிற்கமைய பொலிஸ் நிலையத்திலுள்ள இரு வேறு சிறைக்கூடுகளில் அடைத்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டு 5 சந்தேகநபர்களும் திங்கட்கிழமை (20) கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

விசாரணையின் போது சந்தேக நபர்கள் தரப்பில் மன்னிப்புக் கோரப்பட்டுச் சமாதானமாகச் செல்ல விரும்புவதாக மன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இருப்பினும் வழக்கை விசாரித்த நீதிவான் 5 சந்தேக நபர்களுக்கும் தலா 300 ரூபா அபராதம் விதித்தார்.அத்துடன் 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு மாத கடூழியச் சிறைத்தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்