Thursday, September 3, 2026
Your AD Here

நீர்கொழும்பு உணவகத்தில் பெண் உயிரிழப்பு: சந்தேகநபர் ஆகஸ்ட் 5 வரை விளக்கமறியலில்

நீர்கொழும்பு உள்ள உணவகமொன்றில் மதுபான போத்தலில் தாக்கி பெண்ணை உயிரிழக்கச் செய்ததாக கைது செய்யப்பட்ட 36 வயதுடைய சந்தேகநபரை, வரும் ஆகஸ்ட் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு பிரதம நீதிவான் ஷீலனி பெரேரா உத்தரவிட்டார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் வென்னப்புவ, நைனமடம் பகுதியைச் சேர்ந்த யோஹன் சமரதுங்க என்பவர் ஆவார். உயிரிழந்தவர் நீர்கொழும்பு–பழைய சிலாபம் வீதியைச் சேர்ந்த, ஒரு குழந்தையின் தாயாக இருந்த பெண்.

கடந்த ஜூலை 17 ஆம் திகதி, உயிரிழந்த பெண் மற்றும் சில நண்பர்களுடன் எத்துக்கால பகுதியில் உள்ள உணவகமொன்றில் விருந்து நிகழ்வில் பங்கேற்றிருந்தார். நிகழ்வு முடிந்து வெளியே வந்தபோது, சந்தேகநபருக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறின் போது, சந்தேகநபர் தனது கையில் இருந்த மதுபான போத்தலில் பெண்ணின் தலையில் தாக்கியதாக பொலிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

தாக்குதலுக்குப் பின்னர் பெண் வீட்டுக்குச் சென்றதுடன், தலைவலி காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் குளியலறையில் வழுக்கி விழுந்ததாக கூறியிருந்தாலும், பின்னர் அவரது நிலை மோசமடைந்து அதே வைத்தியசாலையில் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணையில், சம்பவத்தில் பங்கேற்றவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவரின் கணவரும் சகோதரியும் உடலை அடையாளம் கண்டுள்ளனர். மேலும், தலைமுடி மற்றும் இரத்த மாதிரிகள் நீதிமருத்துவ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.

சம்பவம் நடந்த உணவகத்தின் முகாமையாளரிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதுடன், அங்கிருந்த CCTV காட்சிகள் மற்றும் உடைந்த Ballantine’s மதுபான போத்தல் துண்டுகளும் வழக்குப் பொருட்களாக பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

விசாரணையின் போது, சம்பவத்துடன் தொடர்புடைய கைப்பேசிகள், போத்தல் துண்டுகள் மற்றும் CCTV காட்சிகளை அரச இரசாயனப் பரிசோதகரிடம் அனுப்பி அறிக்கை பெறுமாறும் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதற்கான உத்தரவை நீதிவான் பிறப்பித்தார்.

இதையடுத்து, சந்தேகநபரை ஆகஸ்ட் 5 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், வழக்கின் மேலதிக விசாரணை அன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்