இலங்கை மின்சார சபையை (CEB) மறுசீரமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பொறியியலாளர்கள் உள்ளிட்ட அனைத்து மின்சார ஊழியர்களும் இன்று இரவு முதல் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த மறுசீரமைப்பு மின்சார திருத்தச் சட்டத்தின் விதிகளுக்கு இணங்கவில்லை என அவர்கள் கூறுகின்றனர்.
இலங்கை மின்சார சபைப் பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் தனுஷ்க பரக்கிரம கூறுகையில், மறுசீரமைப்பு செயல்முறையை சரிசெய்வதற்கும், ஊழியர்களின் ஒழுக்க உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் சமர்ப்பிக்கப்பட்ட 24 கோரிக்கைகளின் அடிப்படையில் இந்த தொழிற்சங்க நடவடிக்கையை கூட்டாக ஆரம்பிக்க அனைத்து தொழிற்சங்கங்களும் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்தார்.
ஊழியர்களின் கவலைகளுக்கு மின்சக்தி அமைச்சர் சாதகமான பதிலை வழங்கத் தவறியதால், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதைத் தவிர வேறு வழியில்லை என அவர் மேலும் கூறினார். அரசாங்கம் தொடர்ந்து ஊழியர்களின் பிரச்சினைகளைப் புறக்கணித்தால், அனைத்து மின்சார சபைத் தொழிற்சங்கங்களும் தமது தொழிற்சங்க நடவடிக்கைகளை தீவிரப்படுத்தத் தயங்காது என்றும் அவர் எச்சரித்தார்.