– குருக்கள்மடம் மனித புதைகுழி பகுதிகளை ஆய்வு செய்த அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார
மடக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிக்குடி, குருக்கள்மடம் பகுதியில் மனித புதைகுழிகள் இருப்பதாக முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட பகுதிகளை நேரடியாக ஆய்வு செய்த, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார இன்று (04) குறித்த இடங்களைப் பார்வையிட்டார்.
இது குறித்து ஊடகங்களிடம் தெரிவித்த அவர், கடந்த காலங்களில் காணாமல் போனவர்களைப் பற்றிய முறைப்பாடுகளை விசாரிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போதைய அரசால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
எமது அரசு விசாரணை செய்வது மக்களுக்காகவே, வெளிநாடுகளை மகிழ்விப்பதற்காக அல்ல என்றும் அமைச்சர் வலியுறுத்தினார். யாரிடமும் தகவல்கள் இருந்தால் நேரடியாக வழங்குமாறு கேட்டுக்கொண்ட அவர், தகவல் வழங்குவோரின் பாதுகாப்பு அரசாங்கத்தால் உறுதி செய்யப்படும் எனவும் குறிப்பிட்டார்.
பல ஆண்டுகளாக காணாமல் போனவர்களின் குடும்பங்கள் துயரத்தில் வாடிக்கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், அவர்களுக்கு நீதியான தீர்வு மற்றும் உண்மையை வெளிக்கொணர்வது அரசின் கடமை எனவும் குறிப்பிட்டார்.
அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், 2014 இல் இந்த இடங்கள் தொடர்பில் முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளன. 2019 இல் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்தினால் இது குறித்த விசாரணைகள் நடாத்த நீதிமன்ற வைத்திய அதிகாரிகள் உள்ளிட்ட உரிய வசதிகளை வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.
ஆயினும் கடந்த கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியின் காலத்தில் இதற்கு அவசியமான ஒத்துழைப்பு வழங்கப்படவில்லை. கடந்த காலம் தொடர்பில் பேச அவசியமில்லை. அது தொடர்பில் அக்காலத்தில் எவ்வித நடவடிக்கையம் எடுக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்ட வேண்டும்.
குருக்கள்மடம் மனித புதைகுழி தொடர்பில் பல முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டிருந்தாலும் அக்கால அரசுகள் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்த பின் புதிய முறைப்பாடுகளின் அடிப்படையில், காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தின் கீழ் சட்டபூர்வ விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக் காட்டினார்.
எதிர்வரும் 2-3 வாரங்களுக்குள் கொழும்பிலிருந்து நீதிமன்ற வைத்ததியர்களை அழைத்து வந்து இப்பகுதிகளை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் இங்கு குறிப்பிட்டார்.
இன்று இந்த இடத்திற்கு நாம் வருவதற்கான முக்கிய காரணம், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு எனும் வகையில் இங்கு விசாரணை நடவடிக்கைகளுக்கு வழங்க வேண்டிய வசதிகள் குறித்து அவதானம் செலுத்துவதற்காகவாகும். இது தொடடர்பில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், அவற்றைத் தீர்க்கவும், தேவையான ஏற்பாடுகளை, தேவையான நடவடிக்கைகளை நாம் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுப்போம்.
இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை மறக்காமல், நீதியும் உண்மையும் வெளிக்கொணர்வதே அரசின் பிரதான நோக்கம் எனவும், சமாதானமும் ஒற்றுமையும் நிலவ வேண்டுமெனில் துயரத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார இங்கு சுட்டிக்க காட்டினார்.



