யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி நடைபெறும் இடத்தில், வழக்கமான பொலிஸ் அதிகாரிகள் தொடர்ந்து பாதுகாப்பு வழங்குவதால், விசாரணையின் முடிவுகள் பாதிக்கப்படலாம் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கு பதிலளித்த பொது பாதுகாப்பு அமைச்சு, பொலிஸ் அதிகாரிகளை அடிக்கடி மாற்றுவது சாத்தியமில்லை எனத் தெரிவித்துள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் இருந்து அதிகாரிகள், சுழற்சி அடிப்படையில் மட்டுமே பாதுகாப்பு வழங்குவதாகக் கூறினார். “பொலிஸ் பணி இப்படித்தான் நடக்கிறது. கொழும்பில் இருந்து அதிகாரிகளை செம்மணிக்கு அனுப்ப முடியாது” என்றும் அவர் குறிப்பிட்டார்.
அகழ்வுப் பணிகள் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடைபெறுவதாகவும், அதில் தலையிடவோ, செல்வாக்குச் செலுத்தவோ பொலிஸாருக்கு அதிகாரம் இல்லை என்றும் அமைச்சர் கூறினார். “பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்புக்காக மட்டுமே அங்கு இருக்கின்றனர். அவர்களின் இருப்பு விசாரணையின் முடிவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
செம்மணியில் 200 இற்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், மனித உரிமைகள் ஆணைக்குழு அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டது. அதன் அறிக்கையில், விசாரணையை திறம்பட முடிக்க வெளிநாட்டு நிபுணத்துவம் மற்றும் நவீன தொழில்நுட்பம் தேவைப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், வழக்கமான பொலிஸார் தொடர்ந்து ஈடுபடுவது விசாரணையின் முடிவை பாதிக்கலாம் என்றும் அது எச்சரித்துள்ளது.