அனைத்து அரச பணியாளர்களினதும் ஓய்வுபெறும் வயதை 65 ஆக உயர்த்துவதற்கான ஒரு திட்டத்தை அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அரச உயர்மட்ட வட்டாரங்கள் மூலம் அறியமுடிகிறது.
தற்போதைய சட்டத்தின்படி, ஒரு பொது அரச பணியாளரின் ஓய்வுபெறும் வயது 60 ஆகும். இருப்பினும், பல விசேட தொழில்களில் அறுபது வயதுக்கு மேற்பட்ட பல்வேறு வயதுப் பிரிவுகள் ஓய்வுபெறும் வயதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு 61 வயது, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களுக்கு 63 வயது, உயர் நீதிமன்ற நீதியரசர்களுக்கு 65 வயது மற்றும் விசேட மருத்துவ நிபுணர்களுக்கு 63 வயது என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனுடன், உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதும் மேலும் இரண்டு ஆண்டுகள் நீடிக்கப்பட்டு 67 வயதாக உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவது தொடர்பான இந்தத் திட்டம், சமீப நாட்களாகத் தீவிர சமூக விவாதத்துக்குள்ளாகி வருவதைத் தொடர்ந்து, பல தொழில்முறை சங்கங்கள் தங்கள் ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளன.
இந்தக் கோரிக்கைகள் அனைத்தையும் கருத்திற்கொண்டு, சில பொது நிறுவனங்கள் மற்றும் சபைகளின் ஊழியர்கள் ஓய்வு பெறும்போது அவர்களுக்கு வழங்கப்படும் ஊழியர் சேமலாப நிதி மற்றும் தொழிலாளர் நம்பிக்கை நிதியை (EPF, ETF) மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க ஒரு வாய்ப்பை வழங்குவதே, அனைத்து அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க அரசாங்கம் முடிவெடுக்கத் தூண்டிய மற்றொரு காரணமாகும்.
இது அரசாங்கத்துக்கு அதன் பொது நிதி இருப்புகளை வலுப்படுத்த ஒரு வாய்ப்பையும் வழங்கும். இது சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளைச் செயல்படுத்த உதவும் ஒரு சூழ்நிலையாகும். எனவே, அனைத்து அரச பணியாளர்களின் ஓய்வு பெறும் வயது அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது என்று அரச தரப்பு வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன





