நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியைத் தீர்மானிப்பதற்காகத் தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடவுள்ளது. கடந்த 17ஆம் திகதியுடன் ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதியைத் தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் வசமாகியுள்ள இந்தநிலையில், இம் மாத இறுதிக்குள் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி தொடர்பில் அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த வாரம் அறிவித்திருந்தது. இதற்கமைய தேர்தல்கள் ஆணைக்குழு இன்றைய தினம் கூடவுள்ளது. இதேவேளை, முன்னர் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது, 26 அங்குலம் நீளமான வாக்குச் சீட்டு பயன்படுத்தப்பட்டதாக அரச அச்சக திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த வாக்குச் சீட்டை இந்த முறையும் அச்சிட நேரிட்டால் 600 மில்லியன் ரூபாய் முதல் 800 ரூபாய்க்கு இடைப்பட்ட நிதி செலவாகக்கூடும் என அரச அச்சகமா அதிபர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார். காகித உற்பத்திக்கான செலவினம் நான்கு மடங்காக அதிகரித்துள்ளமை, மின் கட்டண அதிகரிப்பு மற்றும் சேவையாளர் கொடுப்பனவு உள்ளிட்ட பல காரணிகளால் அச்சிடல் செலவினம் அதிகரிக்கக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை இரண்டு தேர்தல்களையும் நடாத்துவதற்குத் தேவையான காகிதங்கள் தம்மிடம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். | |