Thursday, January 15, 2026
Your AD Here

சம்மாந்துறைப் பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு மூன்று நாள் தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்.

ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைவாக “தூய்மையான நகரம் – ஆரோக்கியமான வாழ்க்கை” எனும் தொனிப்பொருளில், பொது நிருவாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஆலோசனையின் பேரில் முன்னெடுக்கப்படும் பேரிடருக்குப் பின்னரான சுகாதாரம் மற்றும் டெங்கு ஒழிப்பு மூன்று நாள் தேசிய வேலைத்திட்டம் இன்று புதன்கிழமை (07) சம்மாந்துறைப் பிரதேசத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சம்மாந்துறைப் பிரதேச சபையின் ஏற்பாட்டில், சம்மாந்துறைப் பிரதேச செயலகம், சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகம் மற்றும் சம்மாந்துறை பொலிஸ் நிலையம் ஆகியவை இணைந்து இந்நிகழ்வை முன்னெடுத்தன. இதன் கீழ் பாடசாலை மாணவர்களுக்கான டெங்கு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டதுடன், நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் இனங்காணப்பட்டு சுத்தம் செய்யும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டன.

சம்மாந்துறைப் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா, சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் நௌசாத் முஸ்தபா, பிரதேச சபை செயலாளர் யூ.எல். அப்துல் மஜீட், கௌரவ உறுப்பினர்களான ஏ.எச்.எம். காலித், எம்.ஆர். ஆஷிக் முகம்மட், ஏ.சீ.எம். நயீம், ஹாதிக் இப்றாகீம், சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளர் பி.எம்.வை. அறபாத், சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பதில் பொறுப்பதிகாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப் பலரும் பங்கேற்றனர்.

இதன்போது அல்-அர்சத் மகா வித்தியாலயம் மற்றும் வீரமுனை இராமகிருஷ்ண மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வுகள் இடம்பெற்றன. அதேவேளை வீரமுனை–04 மற்றும் உடங்கா–01 ஆகிய பிரதேசங்களில் சிரமதானப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

இந்த மூன்று நாள் தேசிய வேலைத்திட்டம் மூலம் பொதுமக்கள் மத்தியில் சுகாதார விழிப்புணர்வை அதிகரிப்பதுடன், டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தொடர்ச்சியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்