இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.
அதிகாரப் பகிர்வு தொடர்பான தொடர்ச்சியான கலந்துரையாடல்களின் ஒருகட்டமான இந்த சந்திப்பு இடம்பெற்றதாக எம். ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக சுமந்திரனால் சமர்ப்பிக்கப்பட்ட தனிநபர் பிரேரணையை இம்மாதம் இறுதி வாரத்தில் நாடாளுமன்றில் நிறைவேற்ற ஒத்துழைப்பதாக ஜனாதிபதி இதன் போது உறுதியளித்துள்ளார்.
மாகாணசபைத் தேர்தலைப் பழைய முறையில் நடத்தும் வகையில் சுமந்திரனால் இந்தப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்தப் பிரேரணையை நாடாளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் சேர்க்க ஜனாதிபதி அறிவுறுத்துவார் என சுமந்திரன் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதேவேளை ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்கள் நிறைவடைந்த உடனேயே மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.