நிகழ்நிலைக் காப்பு திருத்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் அதனை தொடர்ந்து பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் கடந்த 22 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் கிடைத்தது.
இதற்கமைய நிகழ்நிலைக் காப்பு திருத்த சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது குறித்த சட்டத்தின் ஏற்பாடுகள் அமுலில் உள்ள நிலையில், குறித்த சட்டமூலம் பாராளுமன்ற குழுநிலை விவாதத்தின் போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள திருத்தங்கள் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கமைய மேற்கொள்ளப்பட வேண்டியமையால், துறைசார் நிபுணர்கள் சமர்ப்பித்துள்ள திருத்த முன்மொழிவுகளை குறித்த சட்டமூலத்தில் அறிமுகப்படுத்துவதற்கு முடியாமல் போயிருந்தது.
குறித்த திருத்தங்களை உள்ளடக்கி 2024 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்கு சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்காக கடந்த பெப்ரவரி 12ம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.
அதற்கமைவாக சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்ட மா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து, குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் அதனை தொடர்ந்து பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் கடந்த ஜூலை மதம் 22ம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.

