முன்னாள் சபாநாயகரும் பாராளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல செலுத்திய ஜீப் வண்டி, மற்றுமொரு காருடன் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்து தொடர்பில் சப்புகஸ்கந்த பொலிஸ் நிலையம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
இன்று (12) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான எஃப்.யூ. வுட்லர் இதனைத் தெரிவித்தார்.
விபத்தில் காயமடைந்த இருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும், 6 மாதக் குழந்தை ஒன்று ரிஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையிலும் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக அவர் கூறினார்.
மேலும், இந்த விபத்தின் போது சாரதிகள் மதுபோதையில் இருந்தனரா? என்பதைப் பரிசோதிப்பதற்காக வைத்திய அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும், அதன் முடிவின் அடிப்படையில் பதவி அல்லது அந்தஸ்தைப் பாராமல் பொலிஸார் நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல தேசிய வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதால், நேற்று அவரிடம் வாக்குமூலம் பெறுவதற்கு பொலிஸார் மேற்கொண்ட முயற்சி பயனளிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதற்கமைய, இன்று மதியத்திற்குள் வைத்திய அறிக்கை கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
மேலும், இது தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.





