தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக, தமிழர் தேசம், இறைமை மற்றும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் சமஷ்டித் தீர்வினை வலியுறுத்தியும், அதற்கு தமிழக அரசியல் தலைவர்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்காகவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான குழுவினர் இவ்வாரம் சென்னை செல்லவுள்ளனர்.
இது தொடர்பில் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வாக ‘ஏக்கியராஜ்ய’ (ஒற்றையாட்சி) அரசியல் யாப்பைத் திணிக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தி, தமிழ் மக்களுக்கான உண்மையான அரசியல் தீர்வாக, தமிழர் தேசம், இறைமை மற்றும் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான சமஷ்டி அரசியல் யாப்பைக் கொண்டுவர வேண்டும்.
இதற்குத் தேவையான அழுத்தங்களை சர்வதேச சமூகம் இலங்கை அரசுக்குக் கொடுக்க வேண்டும். குறிப்பாக, பிராந்திய வல்லரசான இந்திய அரசாங்கம் இலங்கை மீது அழுத்தங்களை ஏற்படுத்த வேண்டும் என்றும், அவ்வாறான சூழலை உருவாக்குவதற்குத் தமிழக அரசியல் தலைவர்கள் குரல் கொடுக்க வேண்டிய அவசர தேவை எழுந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நோக்கத்திற்காக, தமிழக அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்து நிலைமைகளைத் தெளிவுபடுத்தவும், அவர்களது ஆதரவைப் பெற்றுக்கொள்ளவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உயர்மட்டக் குழு இவ்வாரம் சென்னை செல்கிறது.
செல்லவுள்ள குழு விபரம்:
இச்சந்திப்புகளில் கலந்துகொள்வதற்காகப் பின்வரும் பிரதிநிதிகள் சென்னை செல்லவுள்ளனர்:
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (பாராளுமன்ற உறுப்பினர் & தலைவர் – த.தே.ம.மு)
பொ. ஐங்கரநேசன் (தலைவர் – தமிழ்த் தேசிய பசுமை இயக்கம்)
செல்வராஜா கஜேந்திரன் (செயலாளர் – த.தே.ம.மு)
த. சுரேஸ் (தேசிய அமைப்பாளர்)
க. சுகாஷ் (சிரேஷ்ட சட்டத்தரணி & உத்தியோகபூர்வ பேச்சாளர்)
ந. காண்டீபன் (சிரேஷ்ட சட்டத்தரணி & பிரசாரச் செயலாளர்)
ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.





