இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட ‘டிட்வா’ (Ditwah) சூறாவளிப் பேரழிவைத் தொடர்ந்து, நிவாரணப் பணிகளை நேரில் ஆராய்வதற்கும் மேலதிக உதவிகளை வழங்குவதற்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நாளை கொழும்பு வரவுள்ளார்.
கடந்த நவம்பர் 27-ஆம் திகதி இலங்கையைத் தாக்கிய இந்த கோரத் தாண்டவத்தால் 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இக்கட்டான சூழலில், இலங்கைக்கு முதன்முதலில் கரம் கொடுத்த நாடாக இந்தியா ‘சாகர் பந்து’ (Operation Sagar Bandhu) எனும் பாரிய மீட்பு நடவடிக்கையை முன்னெடுத்தது.
இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ் விக்ராந்த் கப்பல் மூலம் உடனடி நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டதுடன், இந்திய விமானப்படை விமானங்கள் மூலம் கூடாரங்கள், மருந்துகள் மற்றும் அதிநவீன ‘பீஷ்ம கியூப்’ (BHISHM Cubes) மருத்துவ அலகுகள் வான்வழியாகக் கொண்டு வரப்பட்டன. அத்துடன், பதுளை மற்றும் கம்பஹா போன்ற கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்திய பேரிடர் மீட்புப் படையினர் (NDRF) நேரடியாகக் களமிறங்கி 450-க்கும் மேற்பட்டோரை மீட்டனர்.
பதுளை மாவட்டத்தில் இந்திய இராணுவத்தின் கள மருத்துவமனை ஆயிரக்கணக்கானோருக்குச் சிகிச்சையளித்ததோடு, துண்டிக்கப்பட்ட போக்குவரத்துப் பாதைகளை சீரமைக்க பெய்லி பாலங்களும் (Bailey bridges) அமைக்கப்பட்டன. தமிழக அரசின் பங்களிப்புடன் கூடிய உணவுப் பொருட்களும் கொழும்பு மற்றும் திருகோணமலைத் துறைமுகங்களை வந்தடைந்தன.
இந்த இக்கட்டான நேரத்தில் இந்தியாவின் மின்னல் வேக மனிதாபிமான உதவியை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பாராட்டியுள்ளார். அமைச்சரின் இந்த வருகை, இலங்கையின் மறுசீரமைப்புப் பணிகளிலும் இந்தியாவின் ‘அயல்தேச முன்னுரிமை’ (Neighbourhood First) கொள்கையையும் உறுதிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.





