இலங்கையில் நிலவும் கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர மனிதாபிமான உதவிகளை வழங்கியமைக்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு (UAE) ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தனது நன்றியினைத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் (Sheikh Mohammed bin Zayed Al Nahyan) அவர்களுடன் நேற்று (வெள்ளிக்கிழமை) தொலைபேசி ஊடாக உரையாடிய போதே, ஜனாதிபதி திஸாநாயக்க இந்த பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
இந்த உரையாடலின் போது, வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அமீரக ஜனாதிபதி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுடன், பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்காக தனது அனுதாபங்களையும் வெளிப்படுத்தினார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கண்டறியவும், மேலதிக உதவிகளை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயவும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து ஒரு விசேட குழு இலங்கைக்கு அனுப்பப்படும் என அமீரக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
இலங்கைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கவும், இக்கட்டான சூழ்நிலையில் இலங்கையுடன் உறுதியாக நிற்கவும் ஐக்கிய அரபு அமீரகம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஷேக் முகமது பின் சயீத் மீள உறுதிப்படுத்தினார்.
இலங்கைக்கு வழங்கப்பட்ட இந்த சரியான நேரத்திலான உதவி, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.





