இலங்கை மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையிலான தொழிலாளர் ஒத்துழைப்பு குறித்த கூட்டு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா கலந்துகொண்டு இணைத் தலைமை தாங்கினார்.
இந்தக் கலந்துரையாடலின் போது இலங்கைப் பணியாளர்களுக்கு இஸ்ரேலில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது மற்றும் தற்போதுள்ள நடைமுறைகளை மேலும் முறைப்படுத்துவது குறித்து விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக, இரு நாட்டு நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை பலப்படுத்துவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.
முக்கிய இணக்கப்பாடுகள்:
சேவைத் துறை: சேவைத் துறைக்கான புதிய உடன்படிக்கை (Protocol) ஒன்றை கைச்சாத்திடுவது தொடர்பாக முன்னேற்றகரமான இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.
பணியாளர் நலன்: வெளிநாட்டுப் பணியாளர்களின் நலன்புரி சேவைகள், பாதுகாப்பு மற்றும் முறையான ஆட்சேர்ப்பு நடைமுறைகளை உறுதிப்படுத்துவது குறித்து மீண்டும் வலியுறுத்தப்பட்டது.
இஸ்ரேல் அரசாங்கமும், அந்நாட்டின் குடிவரவு மற்றும் எல்லை ஆணையமும் (PIBA) வழங்கிய ஆக்கபூர்வமான ஒத்துழைப்புக்கு பிரதி அமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான இந்தத் தொடர்ச்சியான உறவு, எதிர்காலத்தில் மேலும் வலுப்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





