Sunday, February 8, 2026
Your AD Here

20 ஆண்டுகளின் பின் அம்பாறை, நுரைச்சோலை மக்களுக்கு வீடுகள் கிடைக்குமா?

அம்பாறை மாவட்டம், நுரைச்சோலை கிராமத்தில் 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கென, சவூதி அரசாங்கத்தின் உதவியுடன் 500 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டன.

இந்த வீடமைப்பு திட்டத்தை அப்போதைய அமைச்சர் பேரியல் அஷ்ரப் முயற்சி செய்து பெற்றுத் தந்திருந்தார்.

எனினும், அந்நேரத்தில் அரசின் பங்காளிகளாக இருந்த , இப்போது அரச தரப்பாகவுள்ள மக்கள் விடுதலை முன்னணி (JVP) மற்றும் ஜாதிக ஹெல உறுமய (JHU) ஆகிய கட்சிகளது பின்னணியோடு “ஒரு இனத்திற்கே மட்டும் வீடுகளை வழங்க முடியாது” என்ற காரணத்தை முன்வைத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த வேலையை , மிகவும் கனகச்சிதமாக நான்கு பௌத்த பிக்குகள் இணைந்து மேற்கொண்டனர்.

அந்த நால்வரும் , ஓமல்பே சோபித்த தேரர் , எல்லாவல மேதானந்த தேரர் , நன்னப்புரவ புத்த ரக்கித தேரர் , கிரிந்திவல சோமனரத்ன தேரர் ஆகியோராவர்.

இதன் விளைவாக, நீதிமன்ற உத்தரவின்படி, நிர்மாணிக்கப்பட்ட இந்த 500 வீடுகளும் மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படாமல், சுமார் 20 ஆண்டுகளாக பயன்பாடின்றி கிடப்பில் போடப்பட்டன என்பதே வரலாறு .

இந்நிலையில், நீண்ட காலமாக கிடப்பிலுள்ள இந்த வீடுகளை தற்போது மக்களுக்குப் பகிர்ந்தளிக்க, இப்போதைய அரச தரப்பு முயற்சி மேற்கொண்டு வருவதாகத் தெரியவருகிறது.

(அன்று எதிர்த்த பலவற்றுக்கு , இன்று ஆதரவு தானே )

அதனடிப்படையில், நேற்று பிரதியமைச்சரும் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான வசந்த பியதிஸ்ஸ, பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், அக்கரைப்பற்று பிரதேச செயலாளர், மற்றும் சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் உட்பட பலரும் இந்த வீடமைப்பு தொகுதியை பார்வையிட்டனர்.

இந்தச் சந்தர்ப்பத்தில், விரைவில் இந்த வீடுகள் மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் என அவர்கள் கருத்துரைத்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும், இந்த வீடமைப்பு தொகுதியில் வீடுகளோடு இணைந்ததாக சந்தை கட்டிடங்கள், வழிபாட்டு தலங்கள், கல்வி நிலையங்கள் உள்ளிட்ட சகல அடிப்படை உட்கட்டுமான வசதிகளும் அமைக்கப்பட்டிருந்தன.

அத்துடன், இது ஒரு குக்கிராம அமைப்பில் திட்டமிட்ட வகையில் உருவாக்கப்பட்டிருந்தமை, இந்த வீட்டு திட்டத்தின் முக்கிய சிறப்பம்சமாகக் காணப்படுகிறது.

இத்தகைய நிலையில், இந்த அரசாங்கம் இவ்வீடுகளை மக்களுக்குப் பகிர்ந்தளிக்கும் பட்சத்தில், அது காலம் கடந்தாலும் மக்களுக்குச் செய்யப்படும் ஒரு பெரும் உபகாரமாகவே கருதப்படும்.

இந்த முழு விவகாரத்தின் பின்னணியில், இலங்கைக்கான சவூதி தூதுவரின் அழுத்தங்களும் இருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்