சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் கண்புரை சத்திர சிகிச்சைகளை (Cataract Surgery) நிரந்தரமாக முன்னெடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக, சுமார் 20 மில்லியன் ரூபா பெறுமதியான அதிநவீன Phaco Machine ஒன்றும் அவ்வைத்தியசாலைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த இயந்திரத்தை வைத்தியசாலையின் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வு வைத்திய அத்தியட்சகர் டொக்டர் டீ.பிரபாஷங்கர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு இயந்திரத்தை கையளித்தார். இதன்போது பிராந்திய திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.ஏ.எஸ்.எம்.எஸ்.ஷாபி, உயிரியல் மருத்துவ பொறியியலாளர் என்.எம்.இப்ஹாம், வைத்திய நிபுணர்கள் உட்பட வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
வைத்திய அத்தியட்சகர் பிரபாஷங்கரின் கோரிக்கையினை ஏற்று, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அயராத முயற்சியினால், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் நிதியொதுக்கீட்டின் ஊடாக இந்த நவீன இயந்திரம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில், மாகாண சுகாதார அமைச்சின் கீழ் உள்ள ஆதார வைத்தியசாலைகளில் சம்மாந்துறை வைத்தியசாலையில் மாத்திரமே இவ்வாறான நவீன வசதி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாகோ (Phacoemulsification) இயந்திரம் என்பது நவீன கண் மருத்துவத்தில் தையல்கள் இன்றி கண்புரை அறுவை சிகிச்சை செய்யப் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய கருவியாகும். இதன் மூலம் நோயாளிகள் மிகக் குறைந்த நேரத்தில் சிகிச்சைப் பெற்று விரைவாக வீடு திரும்ப முடியும். 2026 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் பிரத்தியேகமான கண் சிகிச்சை விடுதி (Eye Ward) ஒன்றைத் திறப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் சம்மாந்துறை மற்றும் அதனைச் சூழவுள்ள மக்கள் கண்புரை மற்றும் ஏனைய கண் நோய்களுக்கான சிகிச்சைகளைத் தங்குதடையின்றி பெற்றுக்கொள்ள முடியும்.
அந்த வகையில், சம்மாந்துறை வைத்தியசாலையின் சுகாதார சேவையினை மேம்படுத்தும் நோக்கில் அப்பிரதேச மக்களின் நீண்டகாலத் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்த கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு வைத்திய அத்தியட்சகர் உள்ளிட்ட வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் பிரதேச மக்கள் தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.





