2026 ஆம் ஆண்டிற்கான அரச சேவை கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும் முதல் நாள் நிகழ்வு இன்று (01) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிராந்திய பிரிவுத் தலைவர்கள், பணிமனை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
நிகழ்வின் ஆரம்பத்தில் பணிப்பாளரினால் தேசியக் கொடி ஏற்றிவைக்கப்பட்டு, தேசியக் கீதம் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நாட்டுக்காக தமது உயிர்களை அர்ப்பணித்த முப்படையினர் உள்ளிட்ட அனைவரையும் நினைவுகூரும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, புதிய ஆண்டில் மக்களுக்கு வினைத்திறனான மற்றும் நேர்மையான சேவையை வழங்குவதை உறுதிப்படுத்தும் வகையில், அனைத்து உத்தியோகத்தர்களும் ஒன்றிணைந்து அரச சேவை உறுதிமொழியை (சத்தியப்பிரமாணம்) எடுத்துக்கொண்டனர்.







