பாரிஸ் நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவதற்காகத் தன்னுடைய விரலின் ஒரு பாதியை அறுவை சிகிச்சை மூலம் நீக்கியுள்ளார் ஹாக்கி வீரர் மேட் டாசன் (Matt Dawson).
இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தின் போது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஹாக்கி விளையாட்டு வீரரான மேட் டாசன் (Matt Dawson) படுகாயம் அடைந்தார். வலது கை விரல் ஒன்றில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
அறுவை சிகிச்சை மூலம் அதனைச் சரி செய்துவிடலாம் என்றாலும் கூட அந்தக் காயத்தில் இருந்து மீண்டு, விரல் இயல்பாகச் செயல்பட சில மாதங்கள் ஆகலாம் என்று மருத்துவர்கள் அவரை எச்சரித்துள்ளனர்.
மூன்றாவது முறையாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இருக்கும் அந்த வீரரின் ஒலிம்பிக் கனவு கலைந்துவிடும் என்ற அச்சத்தில், தன்னுடைய விரலை அறுவை சிகிச்சை மூலம் நீக்கியுள்ளார்.
30 வயதான மேட் டாசன், தன்னுடைய ஒரு விரலை இழந்த வெறும் 16 நாட்களில், ஜூலை 27-ஆம் தேதி அன்று அர்ஜெண்டினாவுக்கு எதிராக நடைபெற இருக்கும் போட்டியில் தன்னுடைய கூக்கபுர்ராஸ் (ஆஸ்திரேலிய ஹாக்கி அணியின் பெயர்) அணியுடன் பங்கேற்க உள்ளார்.
