கட்சி தாவும் அரசியல் முறையை இல்லாது செய்வதற்கான புதிய சட்டம் தங்களது அரசாங்கத்தில் கொண்டு வரப்படும் என ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பொத்துவில் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் கூட்டணியின் 21 ஆவது பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் தெரிவித்திருந்தார்.
சிலருக்கு நாடாளுமன்ற உறுப்புரிமை கிடைக்கப்பெற்றதன் பின்னர் தாய் தந்தையர் மற்றும் அவர்களின் பிறப்பு என்பன மறந்து போய் விடுகின்றன.மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்ட சிலர், நல்லடக்கமா? தகனம் செய்வதா? என்ற பிரச்சினையின் போது கோட்டாபய ராஜபக்சவுக்கு கையை உயர்த்தினார்கள்.எனினும், முஸ்லிம் மக்களுடைய கலாசார மற்றும் மார்க்க உரிமையைப் பாதுகாப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தி செயற்பட்டது.
மக்கள் கொடுத்த வரங்களை சிலர் மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களுக்காக விற்பனை செய்திருக்கின்றார்கள்.ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்துக்குத் தாவுகின்ற அரசியலுக்கு ஐக்கிய மக்கள் கூட்டணி அரசாங்கத்தில் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
தங்களது சுயலாபங்களுக்காகக் கட்சி மாறுகின்ற அரசியலை நிறுத்துவதற்கு தற்போதைய சட்டங்கள் மேலும் வலுப்படுத்தப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் உரையாற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், சர்வதேசம் ஏற்றுக்கொண்ட பொருளாதார நிபுணர்கள் சஜித் பிரேமதாசவுடனேயே உள்ளதாக தெரிவித்தார்.அதேநேரம் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன், கோட்டாபய ராஜபக்ஷவை எதிர்த்து கேள்வி கேட்கும் துணிச்சல் இருந்தமையினாலேயே சஜித் பிரேமதாசவுக்கு பிரதமர் பதவி வழங்கப்படவில்லை என குறிப்பிட்டார்.