Monday, September 8, 2025
Your AD Here

உள்நாட்டு பொறிமுறையின் ஊடாக மட்டுமே பொறுப்புக்கூறலுக்கு இலங்கை உறுதி.

விடுதலைப் புலிகளுடனான மோதலின் போது நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்கான எந்தவொரு வெளிப்புற தலையீடு அல்லது வழிமுறைகளையும் இலங்கை நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹெரத் தெரிவித்தார். 

ஜெனீவாவில் இன்று நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத் தொடரின் போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க் இலங்கை குறித்த தமது அறிக்கையை முன்வைத்தார். 

அந்த அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் சார்பில் பதில் வழங்கிய வௌிவிவகார அமைச்சர், உள்நாட்டு பொறிமுறையின் ஊடாக மாத்திரமே பொறுப்புக்கூறல் செயல்முறைக்கு இலங்கை உறுதிபூண்டுள்ளதாக குறிப்பிட்டார். 

தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, அனைத்து இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் செழிப்பை உறுதி செய்வதற்கு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதோடு, தொடர்ந்தும் எடுத்து வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். 

எனவே புதிய அரசாங்கத்தினால் தற்போது ஏற்பட்டு வரும் முன்னேற்றத்தை அங்கீகரிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். 

அத்துடன் பொறுப்புக்கூறல் வழிமுறைகள் உட்பட நிர்வாகத்தின் வாக்குறுதிகளை நிறைவேற்ற இலங்கை அரசாங்கத்திற்கு மேலும் கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடம் வௌிவிவகார அமைச்சர் கோரிக்கை விடுத்தார். 

இன்று பிற்பகல், மனித உரிமைகள் பேரவையில் ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க் மனித உரிமைகள் தொடர்பான உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் அறிக்கையை சமர்ப்பித்தார். 

இலங்கை குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், நீதி வழங்குவதற்கும், சட்டத்தின் ஆட்சியை மீட்டெடுப்பதற்கும், பாகுபாடு மற்றும் பிளவுபடுத்தும் அரசியலை ஒழிப்பதற்கும் இலங்கை அரசாங்கத்தின் உறுதிமொழிகள் இறுதியாகவும் உறுதியான முடிவுகளைத் தர வேண்டும் என்றும் ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க் வலியுறுத்தினார். 

உள்நாட்டுப் போரின் போது நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களை தெளிவாக ஒப்புக்கொள்ளவும், அரசின் பொறுப்பையும், விடுதலைப் புலிகள் உள்ளிட்ட அரச சாரா ஆயுதக் குழுக்களின் பொறுப்பை அங்கீகரிக்கவும் அந்த அறிக்கை ஊடாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பான வழக்குகளை கையாள சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் அடிப்படையிலான, ஒரு சுயாதீனமான விசேட குழு மூலம் அர்ப்பணிப்புள்ள நீதித்துறை பொறிமுறையை நிறுவுமாறு இலங்கை அரசாங்கத்தை ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வலியுறுத்தினார். 

வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவத்தால் கைப்பற்றப்பட்டுள்ள காணிகளை விடுவித்தல், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ரத்து செய்தல் மற்றும் நீண்டகாலமாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுவித்தல் ஆகியவை அந்த பரிந்துரைகளில் அடங்குகின்றன. 

சர்வதேச மனித உரிமைகள் கடமைகளை நிறைவேற்ற விரிவான பாதுகாப்புத் துறை மறுசீரமைப்பு மற்றும் பரந்த அரசியலமைப்பு, சட்டம் மற்றும் நிறுவன மாற்றங்களையும் அறிக்கை பரிந்துரைத்துள்ளது. 

ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் இலங்கைக்கு அண்மையில் விஜயம் செய்ததுடன், அதிகாரிகள், சிவில் சமூகம், அரசியல் கட்சிகள் மற்றும் மதத் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடியதன் பின்னர் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத் தொடர் இன்று ஜெனீவாவில் ஆரம்பமான நிலையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்