சமீபத்தில் மித்தெனியாவில் 42,000 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கும் இரசாயனப் பொருட்கள் கைப்பற்றப்பட்ட சம்பவத்தில், கைது செய்யப்பட்ட பியால் மனாம்பெரிக்கு சொந்தமான காணியிலிருந்து இந்த இரசாயனப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பில், பியாலின் சகோதரரான சம்பத் மனாம்பெரி, முன்னாள் SLPP உள்ளூராட்சி சபை உறுப்பினர் மற்றும் முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் என அறியப்படுகிறார். இவர், 2006இல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலையுடன் தொடர்புடையவர் என ஊடகவியலாளர்களான தரிந்து உடுவரகெதர மற்றும் FM பாஸீர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
2006ஆம் ஆண்டு நடந்த நடராஜா ரவிராஜ் படுகொலையின் போது, துப்பாக்கிதாரியை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றதாகக் கூறப்படும் சம்பத் மனாம்பெரி, 2015இல் கைது செய்யப்பட்டார். பின்னர், சட்டமா அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க, அரசு சாட்சியாக மாறியதால், நீதிமன்றத்தால் அவருக்கு நிபந்தனைக்குட்பட்ட மன்னிப்பு வழங்கப்பட்டது.
சம்பத் மனாம்பெரி 160 கிலோகிராம் கஞ்சா விற்பனை தொடர்பில் முன்னர் கைது செய்யப்பட்டு, 10 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர் என்றும் ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பத்தின் SLPP கட்சி உறுப்புரிமை சமீபத்தில் இரத்து செய்யப்பட்டதாகவும் இந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.