இந்திய அரசினால் இலங்கையின் இளம் அரசியல் தலைவர்களுக்காக சிறப்பு பயிற்சி நெறி 2025ம் ஆண்டு ஜூலை 14ம் தேதி தொடக்கம் 26ம் தேதி வரை இந்தியாவில் நடைபெற உள்ளது. இது இந்திய அரசின் “அருகிலுள்ள நாடுகளுக்கு முன்னுரிமை” (Neighbourhood First Policy) கொள்கையின் கீழ், மக்கள்-மக்கள் உறவை வலுப்படுத்தும் முக்கிய முயற்சியாக நடத்தப்படுகிறது.
இந்நிகழ்வுக்கு இலங்கையின் 15 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 25 இளம் அரசியல் தலைவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதில், பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், நகர சபை உறுப்பினர்கள், மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய பலர் கலந்துகொள்கிறார்கள்.
இந்த நிகழ்வு, இந்தியாவின் அபிவிருத்தி முயற்சிகள், ஜனநாயக மரபுகள், பண்பாட்டு பாரம்பரியம் மற்றும் அறிவியல், தொழில்நுட்ப முன்னேற்றங்களை இளம் தலைவர்களுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் பல நகரங்களுக்கு பயணம் செய்யும் வாய்ப்பும், இந்திய அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இளம் அரசியல் தலைவர்களுடன் நேரடி கலந்துரையாடல்களும் இடம்பெறும்.
இந்த பயணத்திற்கு முன்னதாக, இந்தியாவிற்குச் செல்ல இருக்கும் இளம் அரசியல் தலைவர்களை கடந்த 08.07.2025ஆம் திகதி கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிய அலுவலகத்தில் இந்திய உயர்ஸ்தானியர் நேரில் சந்தித்து, பயிற்சியின் முக்கிய நோக்கங்களை விளக்கி, சிறப்பான கலந்துரையாடலை மேற்கொண்டார்.
இது, இலங்கை, இந்தியாக்கு இடையிலான புதிய உறவு பாலங்களை கட்டி எழுப்பவும், இருநாட்டு இளைஞர்களுக்கு இடையே அறிவு சார் கருத்து பரிமாற்றங்களை செய்து கொள்ளவும் ஒரு அரிய சந்தர்ப்பமாகும்.





