கடந்த காலங்களில் ஆட்சியிலிருந்த அமைச்சர்களின் அர்த்தமற்ற செயலை மாற்றி புதிதாக சுகாதார ஊழியர் சேவைக்காக 1990 நியமனங்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.
வடமாகாண சுகாதார சேவை திணைக்களத்தில் சமீபத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,
வட மாகாணத்தில் தாதியரற்ற 33 பிரதேச வைத்தியசாலைகள் தொடர்பில் விசேடக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் சுமார் 3147 தாதியர்களுக்கு புதிதாக நியமனம் வழங்கப்பட்டது. அந்த வகையில் இன்னும் இரண்டு மாதங்களில் 290 தாதியர்களுக்கான நியமனங்களை வழங்க எதிர்பார்க்கப்பட்டுள்ளதுடன், வடமாகாண வைத்தியசாலைகளில் காணப்படும் தாதியர் பற்றாக்குறையை கவனத்தில் கொண்டு அவர்களில் குறிப்பிடத்தக்க தாதியர்களை அப்பகுதிகளுக்கு நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.எதிர் வரும் மார்ச் மாதம் தாதியர் பட்டப்படிப்பை நிறைவு செய்ய உள்ள 875 பேர் சுகாதார சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட உள்ளனர். தாதியர் சேவைக்கு 100 பேரில் 5 ஆண்கள் மாத்திரமே ஆட்சேர்ப்பு செய்யப்படுகின்றனர். ஆகையால் வடமாகாணத்தில் நிலவிவரும் தாதியர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு எதிர்வரும் நாட்களில் ஆண் தாதியர்களை அதிகளவில் சுகாதார சேவையில் இணைத்துக் கொள்வதற்காக பொது சேவை ஆணை குழுவுடன் கலந்துரையாட உள்ளோம்.
கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அமைச்சர்களின் அர்த்தமற்ற செயலை மாற்றி புதிதாக சுகாதார ஊழியர் சேவைக்காக 1990 நியமனங்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் சுகாதார ஊழியர்களுக்கான பணியிட மாற்றம், வெற்றிடங்களை நிரப்பல் பதவி உயர்வு உள்ளிட்ட அவர்கள் எதிர்நோக்கும் ஏனைய சவால்களுக்கும் தீர்வு வழங்கப்படும் என்றார்.