காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் திண்மக்கழிவகற்றல் பணியை மிகச் சிறப்பாக செய்வதற்கு காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் பாஸ்கரன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். அதன் அடிப்படையில் இன்று (19) சனிக்கிழமை காரைதீவு – 03 பிரதேசத்தில் வீதிகளில் சட்டவிரோதமாக கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றும் பணியில் காரைதீவு பிரதேச சபையின் ஊழியர்களின் உதவியுடன் திண்மக் கழிவகற்றல் முகாமைத்துவத்தை மிகவும் சிறப்பாக செய்து வருகின்றார்.
இங்கு கருத்து தெரிவித்த பிரதேச சபையின் தவிசாளர் பாஸ்கரன்,எமது பிரதேசத்தில் உள்ள மக்கள் சட்ட விரோதமாக திண்மக்கழிவுகளை வீதிகளில் கொட்டுகின்ற இந்த நிலை மாற்றப்பட வேண்டும். இது எதிர்காலத்திலே எமது பிரதேசத்தில் சுகாதார சீர்கேடுகளை, சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தும்.
எனவே,சுத்தமான, சுகாதாரமான சூழலையும் அழகான காரைதீவு பிரதேசத்தையும் உருவாக்குவதற்காக எங்களால் ஆன முயற்சிகளை செய்து வருகின்றோம். எங்களுக்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.அது போன்று எதிர்காலத்திலே வருகின்ற ஒவ்வொரு சனிக்கிழமையும் எமது பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசங்களிலே திண்மக்கழிவகற்றல் விடயத்தை மிகச் சிறப்பாக செய்வதற்கு நாங்கள் முயற்சிகளை செய்து வருகின்றோம். அதற்கான ஒத்துழைப்பை பொதுமக்கள் எங்களுக்கு தர வேண்டும். மாறாக, இந்த குப்பைகளை கண்ட கண்ட இடங்களிலே கொட்டுபவர்களுக்கு எதிராக தண்டப் பணம் அறவிடுவதற்கும், அது போன்று அந்த குப்பைகளை கொட்டுபவர்களை சரியான ஆதாரத்துடன் எங்களிடம் தெரிவிப்பவர்களுக்கு சன்மானம் வழங்குவதற்கும் நாங்கள் தீர்மானித்திருக்கின்றோம்.
எனவே பிரதேச மக்கள் எங்களுடன் ஒத்துழைப்பு வழங்கி செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்வதோடு, எமது பிரதேச சபையின் ஊழியர்கள் என்னோடு இணைந்து மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றார்கள் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.









