பாடசாலை பாடத்திட்டத்தில் ஆணுறையைப் பயன்படுத்துவது குறித்து கற்பிக்கும் திட்டத்தை இணைப்பது தொடர்பாக சுகாதார மற்றும் கல்வி அமைச்சுக்களுக்கு இடையே சர்ச்சை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆணுறை பயன்பாடு உட்பட எச்.ஐ.வி தடுப்பு நடவடிக்கைகளை பாடத்திட்டத்தில் இணைக்குமாறு சுகாதார அமைச்சு அதிகாரிகள் முன்மொழிந்த போதிலும், கல்வி அமைச்சு தற்போதைய கல்வி மறுசீரமைப்புகள் காரணமாக இந்த நடவடிக்கையை ஒத்திவைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் தேசிய பால்வினை நோய்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம் அண்மையில் எச்.ஐ.வி மற்றும் பால்வினை நோய் தடுப்பு நடவடிக்கைகளான ஆணுறை பயன்பாடு, வெளிப்பாட்டுக்கு முந்தைய தடுப்பு மருந்துகள் (PrEP) மற்றும் வெளிப்பாட்டுக்கு பிந்தைய தடுப்பு மருந்துகள் (PEP) ஆகியவற்றை மாணவர்களுக்கு முறையாக அறிமுகப்படுத்த பரிந்துரைத்திருந்தது.
அதன்படி, தேசிய கல்வி நிறுவனம், தற்போதுள்ள பாடத்திட்டத்தில் உள்ள இடைவெளிகளை நிவர்த்தி செய்வதற்காக, வயதுக்கு ஏற்ற, சான்றுகள் அடிப்படையிலான அறிவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, இந்த தடுப்பு நடவடிக்கைகளை 10ஆம் வகுப்பு விஞ்ஞானப் பாடநூலில் இணைப்பதற்கான வரைவு யோசனைகளைத் தயாரித்துள்ளது.
எனினும், இந்த நடவடிக்கை இரு அமைச்சுக்களுக்கிடையில் ஒரு இழுபறி நிலையை உருவாக்கியுள்ளதாகவும், சுகாதார அமைச்சு இந்த மறுசீரமைப்புகளுக்காக அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், கல்வி அதிகாரிகள் உள்ளடக்கத்தின் நோக்கம் மற்றும் கட்டமைப்பை குறித்து எச்சரிக்கையாக உள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.