இலங்கை தமிழரசு கட்சியினர் இன்று புதன்கிழமை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களை சந்தித்து பேச உள்ளனர்.
இந்தச் சந்திப்பு இன்று மதியம் ஒரு மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது என்று இலங்கை தமிழர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வுடன் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிற பிரச்சனைகள், வடக்கு, கிழக்கு அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் இலங்கை தமிழரசு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 8 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கட்சியின் தலைவர் C.V.K சிவஞானம் பொதுச்செயலாளர் M.A சுமந்திரன் ஆகியோரும் பங்கேற்க உள்ளனர். தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் பேசுவது என்று இலங்கை தமிழரசு கட்சி இறுதியாக கூட்டிய மத்திய குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சந்திப்புக்கான நேரம் கோரி ஜனாதிபதி அனுர குமாரவுக்கு கட்சியின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. பேச்சுக்கான நல்லெண்ண சமிஞ்சையாக வரவு – செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிப்பதில்லை என்று கட்சி தீர்மானித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.





