அம்பாறையில் பெய்து வரும் கனமழையால் கொண்டைவட்டுவான் குளம் நிரம்பி வழிகிறது.இது தவிர அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக குளங்களின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாக நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது.மேலும் அம்பாறை கல்முனை பிரதான வீதிகளை இணைக்கும் மாவடிப்பள்ளி-காரைதீவு செல்லும் பிரதான வீதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதுடன் பொது மக்கள் அவதானமாக செயற்படுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
மழை காரணமாக அம்பாறை கொண்டைவட்டுவான் குளத்தின் நீர் சுமார் ஆறு அங்குலம் நிரம்பி வழிகிறது. இதன் காரணமாக அம்பாறை-இகினியாகல வீதியில் போக்குவரத்துக்கு சிறிய இடையூறு ஏற்பட்டுள்ளது.கொண்டைவட்டுவான் நீர்த்தேக்கத்தைச் சுற்றியுள்ள வயல்களும் நீரில் மூழ்கியுள்ளன.மேலும் அருகில் உள்ள குளங்களின் நீர்மட்டம் உயர்ந்து நிரம்பி நீர் வெளியேறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது இகினியாகல சேனநாயக்க சமுத்திரத்தின் நீர்மட்டம் 77 அடி ஒன்பது அங்குலம் நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாக நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் எக்கலோய நீர்த்தேக்கம் , பன்னல்கம குளம், நாமல் ஓயா நீர்த்தேக்கம் ,அம்பலனோயா குளம், ஆகியற்றின் நீர் மட்டங்கள் உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அம்பாறை குளத்தின் நீர்மட்டம் 6 அடி 9 அங்குலமாகவும் நிரம்பி வழியும் நீர்மட்டம் 13 அடியாகவும் உள்ளது. இதற்கிடையில் கனமழை காரணமாக கல்முனை மற்றும் சம்மாந்துறை பகுதிகளில் உள்ள நெல் வயல்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதே வேளை சம்மாந்துறை பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை பொதுமக்களுக்கு முக்கிய அறிவித்தலை விடுத்துள்ளது.
தற்போது எமது பிரதேசத்தில் பெய்து வரும் மழை இன்னும் சில தினங்களுக்கு நீடிக்கக் கூடிய வாய்ப்பிருப்பதால்இ வெள்ள அனர்த்தத்திலிருந்து பொதுமக்கள் தங்களது உயிர்களையும் உடமைகளையும் பாதுகாத்துக் கொள்ளுமாறும் அவசியமில்லாமல் நீர்நிரம்பக் கூடிய ஆறுகள்இ குளங்கள் போன்றவைகளுக்கு செல்வதையும்இ கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்புவதையும் இயன்றவரை தவிர்த்து பாதுகாப்பாக இருந்து கொள்ளுமாறும்இ இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கு இவ்விடயத்தை உணர்த்தி பெற்றோர்கள் இவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குமாறும் சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பள்ளிவாசல்கள் ஊடாக பொதுமக்களை அறிவுறுத்துமாறு எமது சபையைக் கேட்டுள்ளார்.
எனவே சகலரும் பாதுகாப்பு முன்னேற்பாடுகளைக் கருத்திற்கொண்டு செயற்படுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவித்துள்ளது.இது தவிர வெள்ள அனர்த்தங்களை கட்டுப்படுத்த கல்முனை மாநகர சபை துரித நடவடிக்கை மேற்கொண்டு முகத்துவாரங்கள் அனைத்தும் வெட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக பெய்து வருகின்ற அடை மழை காரணமாக கல்முனைப் பிராந்தியத்தில் வெள்ள அனர்த்தம் ஏற்படுவதைக் கட்டுப்படுத்தும் பொருட்டு இப்பகுதியிலுள்ள அனைத்து முகத்துவாரங்களையும் திறந்து, வெள்ள நீரை கடலுக்கு அனுப்பும் நடவடிக்கைகளை கல்முனை மாநகர சபை துரிதமாக முன்னெடுத்துள்ளது.
கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி அறிவுறுத்தலின் பேரில் கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை, பாண்டிருப்பு மற்றும் பெரியநீலாவணை பிரதேசங்களின் கடல் வாய் முகத்துவாரங்கள் தோண்டித் திறக்கப்பட்டுள்ளன.
அத்துடன் கல்முனையின நடராசா வாய்க்கால் உள்ளிட்ட முக்கிய வாய்க்கால்கள் மற்றும் மதகுகள் யாவும் துப்பரவு செய்யப்பட்டுள்ளதுடன் ஏலவே துப்பரவு செய்யப்பட்டு, மீண்டும் குப்பைகளினாலும் மண் திட்டுகளினாலும் நிரம்பியுள்ள வடிகான்கள் துரிதமாக சீர்செய்யப்பட்டுள்ளன.
அதேவேளை கல்முனையையும் நாவிதன்வெளி, சவளக்கடை மற்றும் கொலனிப் பகுதிகளையும் இணைக்கும் கிட்டங்கி தாம்போதியில் வெள்ள நீர் பாய்வதன் காரணமாக பரவியிருந்த ஆற்று வாழைகள் அகற்றப்பட்டு, அப்பாதை சீர் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.










