மண்ணுக்காகத் தம்மை ஈந்தவர்களை நினைவேந்தும் வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில், மாவீரர்களின் பெற்றோர் உரித்துடையவர் மதிப்பளிக்கும் நிகழ்வு மானிப்பாயில் நேற்று (25) உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
பொதுச் சுடர் ஏற்றல்
செவ்வாய்க்கிழமை மாலை 3 மணிக்கு திருவள்ளுவர் சன சமூக நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு பிரதேச சபை உறுப்பினர் கலொக் கணநாதன் உஷாந்தன் தலைமை தாங்கினார்.
முன்னதாக ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட பெற்றோர் உரித்துடையவரில், இரு வீரர்களை மண்ணுக்கு ஈந்த சற்குணராசா தேவமனோகரி அம்மா பொதுச் சுடரை ஏற்றி வைத்தார். ஏனைய சுடர்கள் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து அனைவரும் மலரஞ்சலி செலுத்தினர்.
பிரதேச சபை தவிசாளர் ஜெசீதன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கஜதீபன் உள்ளிட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களும் இந்த அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டனர்.
நிகழ்வின் நிறைவில் பெற்றோர் உரித்துடையவர் மரக்கன்றுகள் மற்றும் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.









