Thursday, July 17, 2025
Your AD Here

காசா போர் நிறுத்தம்: கட்டாரில் ஒரு வாரம் கடந்த பேச்சுவார்த்தை

– நெதன்யாகுவின் கூட்டணி அரசில் பெரும்பான்மைக்குச் சிக்கல்

காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்காக கட்டார் தலைநகர் டோஹாவில் ஒரு வாரம் தாண்டியும் பேச்சுவார்த்தைகள் நீடித்து வரும் நிலையில் காசாவில் வீடுகள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் அடைக்கலம் பெற்ற தற்காலிக முகாம்கள் மீது இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களில் பலஸ்தீனர்களின் உயிரிழப்பு மேலும் அதிகரித்துள்ளது.

காசாவில் போர் நிறுத்தம் மற்றும் இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்கும் முயற்சியாக டோஹாவில் இடம்பெற்று வரும் இஸ்ரேல் மற்றும் ஹமாஸுக்கு இடையிலான மறைமுக பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக கட்டார் குறிப்பிட்டுள்ளது.

‘உடன்படிக்கை தொடர்பில் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. இரு தரப்பு பிரதிநிதிகள் மற்றும் மத்தியஸ்தர்கள் டோஹாவில் தொடர்ந்தும் இருப்பதோடு உடன்படிக்கை ஒன்றை எட்டுவதில் தீவிர பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர்’ என்று கட்டார் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் மாஜித் அல் அன்சாரி நேற்று (15) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.‘இந்தப் பேச்சுவார்த்தை இன்னும் முதல் கட்டத்தில் இருப்பதோடு, இறைவன் நாடினால் அடுத்த கட்டத்தை ஆரம்பிப்பதற்கான கொள்கை ரீதியான உடன்படிக்கை ஒன்றை எட்டுவதற்கான பேச்சுவார்த்தையாக அது உள்ளது’ என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும் இந்தப் பேச்சுவார்த்தையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இழுபறி நீடிக்கும் சூழலில் உடன்பாடு ஒன்றை எட்டுவதில் நிச்சயமற்ற நிலை நீடித்து வருகிறது. உடன்பாடு ஒன்றை எட்டுவதை தடுப்பதாக இரு தரப்பும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றன.

‘நாளை உடன்படிக்கை ஒன்று எட்டப்படுமா அல்லது நாளை பேச்சுவார்த்தை முறிவடையுமா என்பது பற்றி எம்மால் கூறமுடியாதுள்ளது’ என்று அன்சாரி கூறினார்.காசாவில் 60 நாள் தற்காலிக போர் நிறுத்தம் ஒன்றுக்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பரிந்துரை முன்வைத்த நிலையிலேயே டோஹா பேச்சுவார்த்தை ஆரம்பமானது. எவ்வாறாயினும் பல விடயங்கள் தொடர்பில் தொடர்ந்து முரண்பாடு நீடித்து வருகிறது. குறிப்பாக காசாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் வாபஸ் பெறுவதும் மற்றும் காசா மக்களுக்கான உதவி விநியோகம் தொடர்பில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்புகள் பிடிவாதம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தணிவு இல்லாமல் தொடர்கின்றன. காசா நகரின் ஷட்டி அகதி முகாமில் நாசர் குடும்பத்திற்குச் சொந்தமான வீடு ஒன்றின் மீது இஸ்ரேல் போர் விமானம் நடத்திய தாக்குதலில் ஐவர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்ததாக பலஸ்தீன செம்பிறை சங்கம் தெரிவித்துள்ளது.காசாவில் நேற்று காலை தொடக்கம் இடம்பெற்ற தாக்குதல்களில் 23 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதாக மருத்துவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

குறிப்பாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் உதவி விநியோக இடங்களில் உதவி பெறுவதற்காக கூடும் பலஸ்தீனர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 875 ஆக அதிகரித்திருப்பதாக ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இதில் அமெரிக்க ஆதரவு உதவித் தளங்களில் 674 பேரும் மற்ற உதவி விநியோகங்களில் 201 பேரும் கொல்லப்பட்டதாக ஐ.நா. உரிமைகள் அலுவலகத்தின் பேச்சாளர் தமீன் அல் கீடான், ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் நேற்று (15) தெரிவித்தார்.‘மருத்துவ, மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான அமைப்புகள் உட்பட பல்வேறு நம்பகமான ஆதாரங்கள் மூலம் சேகரிக்கப்பட்ட எமது சொந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டே இந்தத் தரவு சேகரிக்கப்பட்டுள்ளது’ என்று அவர் தெரிவித்தார்.

ஐ.நா. மற்றும் மற்ற பிரதான தொண்டு அமைப்புகளுக்கு மாற்றாகவே அமெரிக்க ஆதரவில் காசாவில் உதவி விநியோகங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எனினும் இந்த உதவி விநியோக முறை பாதுகாப்பற்றது என்று ஐ.நா. சாடியுள்ளது.

மறுபுறம் காசாவில் இஸ்ரேல் ‘தாகப் போர்’ ஒன்றையும் நடத்தி வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தண்ணீர் பெறுவதற்கு காத்திருக்கும் வரிசைகளை இலக்கு வைத்து இஸ்ரேலியப் படை திட்டமிட்டு நடத்தி வரும் தாக்குதல்களில் 700 இற்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் அவர்களில் பெரும்பாலானவர்கள் சிறுவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.இஸ்ரேலியப் படைகள் 720 கிணறுகளை அழித்திருப்பதோடு காசாவில் நீர் மற்றும் கழிவு நீர் உட்கட்டமைப்புகளை செயற்படுத்துவதற்கு தேவையான எரிபொருளை முடக்கி இருப்பதாக காசா அரச ஊடக அலுவலகம் கடந்த திங்களன்று குறிப்பிட்டிருந்தது. இதனால் கடுமையான நீர் தட்டுபாடு ஏற்பட்டு அத்தியாசிய சேவைகள் முடங்கி இருப்பதோடு நோய்த் தொற்றுகள் குறிப்பாக சிறுவர்கள் இடையே பரவி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோன்று காசாவில் ஐ.நா. நிறுவனத்தினால் நடத்தப்படும் சுகாதார நிலையங்களில் சோதனைக்கு உட்படுத்தப்படும் பத்து சிறுவர்களில் ஒருவர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதாக பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காசாவில் போர் தொடரும் நிலையில் இஸ்ரேலிய தீவிர பழைமைவாத கட்சி ஒன்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கூட்டணி அரசில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. இதனால் இஸ்ரேல் அரசின் பெரும்பான்மை குறைந்துள்ளது.தீவிர பழைமைவாத யூதர்களுக்கு இஸ்ரேலிய இராணுவச் சேவையில் இணைவதில் இருக்கும் சிறப்புரிமையை மட்டுப்படுத்தும் சட்டமூலத்திற்கு எதிராகவே ஐக்கிய தோரா யூதக் கட்சி அரசில் இருந்து விலகியுள்ளது. இதனால் நெதன்யாகுவின் கூட்டணி அரசின் பெரும்பான்மை 120 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் 61 ஆக குறைந்துள்ளது.

சிரியாவில் த்ரூஸ் மக்கள் பெரும்பான்மையாக உள்ள சுவைதா பிராந்தியத்தில் சிரிய அரச படைகளுக்கு எதிராக இஸ்ரேல் படை நேற்று (15) தாக்குதல் நடத்தி உள்ளது. மதச் சிறுபான்மையினரை பாதுகாக்கும் வகையில் தாக்குதல் நடத்தியதாக அது குறிப்பிட்டுள்ளது.

த்ரூஸ் போராளிகள் மற்றும் அரபு நடோடிகளுக்கு இடையே ஏற்பட்ட போதலில் 100க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்தே சிரியா அந்தப் பிராந்தியத்தில் துருப்புகளை நிலைநிறுத்தியது.சுவைதா நகரில் சிரிய பாதுகாப்பு அமைச்சு போர் நிறுத்தம் ஒன்றை அறிவித்து அங்கு அரச படைகள் நுழைந்ததை அடுத்தே இந்த தாக்குதல் தொடர்பில் இஸ்ரேல் அறிவித்துள்ளது. பெரும்பாலான த்ரூஸ் மதத்தலைவர்கள் படைகள் நிலைநிறுத்தப்படுவதை வரவேற்றிருப்பதோடு ஒரு மூத்த தலைவர் மாத்திரம் இதற்கு எதிரான போராட அழைப்பு விடுத்துள்ளார்.

‘பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ராயேல் காட்ஸும், த்ரூஸ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, சுவைதா பிராந்தியத்திற்குள் கொண்டு வரப்பட்ட அரசுப் படைகள் மற்றும் ஆயுதங்களை உடனடியாகத் தாக்குமாறு இஸ்ரேலிய இராணுவத்திற்கு அறிவுறுத்தியுள்ளனர்’ என்று கூட்டு அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘சிரிய அரசு அவர்களுக்கு தீங்கு விளைவிப்பதை தடுக்கும் வகையிலும் சிரியாவுடனான எல்லையை ஒட்டியுள்ள எமது பகுதிகளில் இராணுவமயமற்றதாக இருப்பதை உறுதி செய்வதற்கும் நாம் செயற்பட்டோம்’ என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது.கிழக்கு லெபனானில் இஸ்ரேல் நேற்று நடத்திய வான் தாக்குதல்களில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டு மேலும் எட்டுப் பேர் காயமடைந்திருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. லெபனானுடனான போர் நிறுத்த மீறலில் தொடர்ச்சியாகவே இஸ்ரேலின் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

பல்பக்கில் உள்ள வாதி பாரா சிறு நகரில் சிரிய அகதிகளுக்கான முகாம் ஒன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் ஏழு சிரிய நாட்டவர்கள் இருப்பதாக என்.என்.ஏ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஷிமுஸ்டர் சிறு நகர் மற்றும் உம்மு அலி பகுதியிலும் இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தி இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. ஹிஸ்புல்லா தளங்களை இலக்கு வைத்தே தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் கூறியுள்ளது. இஸ்ரேல் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா எல்லை தாண்டிய மோதலைத் தொடர்ந்து கடந்த செப்டெம்பரில் முழு அளவில் போர் வெடித்தது. அதனைத் தொடர்ந்து கடந்த நவம்பரில் போர் நிறுத்தம் எட்டப்பட்டபோதும் லெபானின் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இஸ்ரேல் சுமார் 3,000 தடவைகள் போர் நிறுத்தத்தை மீறி இருப்பதாக லெபனான் நிர்வாகம் குற்றம்சாட்டியுள்ளது.இந்தத் தாக்குதல்களில் குறைந்தது 236 பேர் கொல்லப்பட்டு மேலும் 540 பேர் வரை காயமடைந்திருப்பதாக அது சுட்டிக்காட்டியது.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்