இன்று கொழும்பு குதிரைப்பந்தய திடலில் ஆரம்பம்.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள 23 வயதுக்கு உட்பட்ட ஆசிய கிண்ண தகுதிகாண் சுற்றுப் போட்டிகளையொட்டி 23 வயதுக்கு உட்பட இலங்கை கால்பந்து அணியின் தெரிவுக்கான தேர்வு முகாம்கள் இன்று (17) ஆரம்பமாகவுள்ளன.
இதில் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களுக்கான தேர்வு முகாம் கொழும்பு குதிரைப்பந்தயத் திடல் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது. ஏ மற்றும் பி குழுக்களாக இந்த தேர்வு முகாம்கள் இடம்பெறுகின்றன.இதேவேளை கேகாலை, நுவரெலியா, அநுராதபுரம், கண்டி, மாத்தளை, பதுளை, இரத்தினபுரி, குருநாகல், காலி, ஹம்பாந்தோட்டை, புத்தளம் மற்றும் வெளிநாடுகளைத் தளமாகக் கொண்ட வீரர்களுக்கான தேர்வு முகம் நாளை (18) நடைபெறவுள்ளது. கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் நடைபெறும் இந்தத் தேர்வு முகாமின் ஏ குழுவுக்கான தேர்வுகள் காலை 6.30 இற்கு பி குழுவுக்காக தேர்வுகள் காலை 9.30 இற்கு ஆரம்பமாகவுள்ளன.
தொடர்ந்து யாழ்ப்பாணம், அம்பாறை, மன்னார், கிளிநொச்சி, வவுனியா, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கான தேர்வு முகாம் நாளை மறுதினம் (19) சிட்டி லீக் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
23 வயதுக்கு உட்பட ஆசிய கிண்ணம் அடுத்த ஆண்டு ஜனவரியில் சவூதி அரேபியாவில் நடைபெறவுள்ளது. இதற்கான தகுதிகாண் போட்டியில் இலங்கை 23 வயதுக்கு உட்பட்ட அணி ஈ குழுவில் ஆடவுள்ளது. இதில் பலஸ்தீன், உஸ்பகிஸ்தான் மற்றும் கிரிகிஸ்தான் அணிகள் இடம்பெற்றிருப்பதோடு தகுதிகாண் போட்டிகள் எதிர்வரும் செப்டெம்பர் ஆரம்பத்தில் கிரிகிஸ்தானில் நடைபெறவுள்ளது.