விளையாட்டுத்துறை அமைச்சும் விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைகளமும் இணைந்து காலியில் நடத்திய 49ஆவது தேசிய விளையாட்டு விழாவின் மரதன் ஓட்டப் போட்டியில் ஆண்கள் பிரிவில் மத்திய மாகாணம் சார்பாக பங்குபற்றிய அட்டன் வெலி ஓயாவைச் சேர்ந்த கே. சண்முகேஸ்வரன் முதலாம் இடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.மரதன் ஓட்டப் போட்டியை 2 மணித்தியாலங்கள், 24 நிமிடங்கள், 43 செக்கன்களில் நிறைவுசெய்து முதலாம் இடத்தை சண்முகேஸ்வரன் பெற்றார்.
இவர் கடந்த வருடம் மஹியங்கனையில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழா மரதன் ஓட்டப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்றிருந்தார்.
காலி மரதன் ஓட்டப் போட்டியில் ஊவா மாகாண வீரர் சி. சந்தன (2:25:18) வெள்ளிப் பதக்கத்தையும் கிழக்கு மாகாண வீரர் ரி. டபிள்யூ. ரத்னபால (2:30:46) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
பெண்கள் பிரிவில் மத்திய மாகாணத்திற்கு தங்கம், வெள்ளி ஆகிய இரண்டு பதக்கங்களும் கிடைத்தது.மதுவன்தி ஹேரத் (2:53:42) தங்கப் பதக்கத்தையும் எஸ். ஹேரத் (3:00:21) வெள்ளிப் பதக்கத்தையும் ஊவா மாகாண வீராங்கனை நிமேஷா நிதர்ஷனி (3:02.32) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
பெண்கள் பிரிவில் போட்டியிட்ட நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த வேலு கிருசாந்தினி (3:14:15) ஏழாம் இடத்தைப் பெற்றார்.





