Monday, February 9, 2026
Your AD Here

மாகாண சபைகளை பலவீனப்படுத்தும் எந்த நோக்கமும் அரசாங்கத்துக்கு கிடையாது.

சபையில் சாணக்கியனுக்கு அமைச்சர் பிமல் ரத்நாயக்க பதில்

– தவறான கருத்துக்களால் இனவாத அரசியல் செய்ய முயற்சிக்க வேண்டாம்
மாகாண சபைகளை பலவீனப்படுத்தும் எத்தகைய நோக்கமும் அரசாங்கத்திற்கு கிடையாது என்றும் அவ்வாறான எத்தகைய நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்றும் சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவ்வாறான கருத்துக்களை தெரிவித்து இனவாத அரசியலை முன்னெடுக்க வேண்டாம் என்றும் கீழ்த்தரமான நாடகத்தை கைவிட வேண்டும் என்று அவர் சபையில் சாணக்கியன் எம்.பியைக் கேட்டுக் கொண்டார்.

பாராளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது போக்குவரத்து அமைச்சிடம் கேள்வியெழுப்பி உரையாற்றிய இராசமாணிக்கம் சாணக்கியன்,

”மாகாண சபை முறைமையை பலவீனமாக்காது நான் கூறிய வக்கியல்ல வீதி, வில்லலுகுளம் வீதி, கிரான் பாலம் ஆகியவற்றை அபிவிருத்தி செய்வதற்கு பிரதேச அபிவிருத்தி திணைக்களத்திற்கு ஏன் நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ள முடியவில்லை என்றே நான் வினவுகின்றேன். அமைச்சர் விமல் ரத்னாயக்க அவர்களின் செயல்பாடுகள் எமது உரிமைகளை நலிவாக்க திட்டமிட்டே இடம்பெறுகின்றது.

பாராளுமன்றத்தில் உள்ள இந்த கேள்வி பதில் முறையை மீண்டும் மீளாய்வு செய்ய வேண்டும். ஏனெனில், இந்த கேள்வியை நான் பாராளுமன்றத்திற்கு தெரிவாகி ஒரு சில வாரங்களிலேயே வழங்கி இருந்தேன். அந்த கேள்வி இவ்வாறு 6, 7 மாதங்களுக்கு பின்னர் எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், நீங்கள் சிலவேளை அதற்கான வேலைகளை ஆரம்பித்து இருக்கலாம். அந்த வேலைத்திட்டம் உலக வங்கியின் நிதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பது எனக்கும் தெரியும்.

எனது 1ஆவது கேள்வி, எமது அமைச்சரவை அமைச்சர் மட்டக்களப்பில் நடைபெற்ற அபிவிருத்தி குழுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கி வருகை தந்திருந்த போது வீதிகள் தொடர்பான பல முறைபாடுகளை நாம் அவரிடம் முன்வைத்திருந்தோம். எமது மாவட்டத்திலுள்ள பல வீதிகள் பிரதேச அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமானவை சிலது பிரதேச சபைக்கு சொந்தமானவை. ஆனால் நிதிகள் அனைத்தும் மத்திய அரசாங்கம் வைத்திருக்கிறது. அவ்வாறாயின் மாகாண சபைக்கு கீழுள்ள வீதிகளை அபிவிருத்தி செய்வததாக இருப்பின் நாம் மத்திய அரசாங்கத்திடம் கோரவும் முடியாது. ஆனால் மாகாணத்திற்கான நிதிகளை வைத்துக் கொண்டு அந்த வேலைகளை எவ்வாறு முன்னெடுப்பது என்றும் தெரியாது. இது போன்ற பல வீதிகள் உள்ளன.

எனவே, உங்களது அமைச்சின் கீழ் மாகாணத்திற்கு குறிப்பிட்ட வீதிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கான ஏதேனும் வழிகள் உள்ளனவா? ஏனெனில் வக்கியல்ல வெள்ளாவெளிக்கு வரும் வீதி கடும் மோசமாக உள்ளது. ஒரு அம்பியூலன்ஸ் வண்டி கூட பயணிக்க முடியாத நிலை காணப்படுகிறது. எனவே, வீதி அபிவிருத்தி அதிகாரசபை, மாகாணத்திற்கு நிதி ஒதுக்குவதற்கு ஏதேனும் வழிகள் உள்ளனவா?

எனது 2ஆவது கேள்வி, நீங்கள் சொன்னதற்கமைய மாகாணத்திற்கு இந்த வேலைத் திட்டங்களை செய்ய முடியாமைக்கு ஒரே ஒரு காரணம் நிதி இல்லாமை மாத்திரம் தான். தொழில்நுட்ப அறிவும், தொழில்நுட்ப பிரதேச அபிவிருத்தி திணைக்களத்திற்கு உள்ளது. ஆனால் உங்களது பதிலை பார்க்கும் போது பிரதேச அபிவிருத்தி திணைக்களத்திற்கான வீதிகளை வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊடாக செய்ய போவதாக கூறுகின்றீர்கள். அதாவது மாகாணத்திற்கு அதற்கான தொழில்நுட்ப நிபுணத்துவம் இல்லை. ஆனால் இதனை செய்ய முடியாமைக்கு ஒரே காரணம் நிதி இல்லாமை மாத்திரமே. மாகாண சபை முறைமையை பலவீனப்படுத்தும் செயல்பாடே இதற்கு கரணம். இந்த வருடம் ரூ. 14,000 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நீங்கள் கூறுகின்றீர்கள். வட மாகாணத்திற்கு ரூ. 1 பில்லியன் நிதிக்கான வீதி அபிவிருத்திகள் இடம்பெற போவதாக ஜனாதிபதியின் வரவு செலவு திட்ட உரையில் கூறப்பட்டது. ஆனால், தற்போது எனது கேள்வி என்னவென்றால், இந்த மாகாண சபை முறைமையை பலவீனமாக்கும் செயற்பாடுகள் எல்லா அமைச்சுகளும் தொடர்ச்சியாக மேற்கொள்வதாக தெரிகிறது.” என தெரிவித்தார்.

அமைச்சர் சாணக்கியனின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் கருத்து தெரிவித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க,
” இம்முறை மாகாண சபைகளுக்கு கடந்த வருடங்களைப் போன்று மூன்று மடங்கு நிதி அரசாங்கத்தினால் கொடுக்கப்பட்டுள்ளது. வங்குரோத்து நிலையிலிருந்த நாட்டையே நாம் பொறுப்பெற்றோம். வீதிகளை அபிவிருத்தி செய்வதற்காக நிதி யமைச்சு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நிதியை ஒதுக்கியுள்ளது. இதனால் மாகாண சபை முறைகளை பலவீனப்படுத்த நாம் நடவடிக்கை எடுக்கவில்லை.

எந்த வீதியாக இருந்தாலும் அந்தந்த வீதிகள் அந்தந்த நிறுவனங்களுக்கு சொந்தமானவையே. நாங்கள் எந்தளவுக்கு நியாயமாக செயற்படுகின்றோம் என்பதனை வடக்கில் உள்ள சில எம்.பிக்கள் அறிந்துகொள்வர்.

நாம் கடந்த காலங்களை விட மூன்று மடங்கு நிதியை மாகாண சபைகளுக்கு ஒதுக்கியுள்ளோம். எனினும் நீங்கள் இனவாத அரசியலை செய்ய வேண்டாம். அந்த கீழ்த்தரமான நாடகத்தை  கைவிட வேண்டும்” என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்