அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலக குழுவினர் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை இன்று (11) சந்தித்து கலந்துரையாடினர்.
இலங்கையில் இருந்து அமெரிக்கா இறங்குமதி செய்யும் பொருட்கள் மீதான தீர்வை வரி குறித்து கலந்துரையாடுவதற்காக இலங்கை அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட குழுவைப் பாராட்டிய அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் குழு, இலங்கை இதுவரை அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றத்தைப் பாராட்டியது.
இதுவரையிலான இலங்கையின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகம் (USTR) வழங்கிய ஆதரவு மற்றும் எதிர்காலத்தில் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்படுத்தப்படவுள்ள வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கை என்பது மீண்டுவரும் ஒரு சிறிய பொருளாதாரத்துடன் கூடிய நாடு என்பதையும், சிறியதொரு வெளிப்புற தாக்கம் கூட இலங்கையின் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் ஜனாதிபதி, அமெரிக்க வர்த்தக பிரதிநிதி குழுவின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். இந்த அனைத்து காரணிகளையும் கருத்தில் கொண்டு வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்த பேச்சுவார்த்தைகள் தொடர வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
அனைத்து தீர்மானங்களின் போதும் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவை வலுப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்துவது முக்கியம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung),அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலக பணிப்பாளர் (தெற்காசியா) எமிலி எஷ்பி(Emily Ashby), உதவி அமெரிக்க வர்த்தக பிரதிநிதி (தெற்கு மற்றும் மத்திய ஆசியா) பிரெண்டன் லின்ச் (Brendan Lynch), இலங்கைக்கான அமெரிக்க தூதரக பொருளாதார மற்றும் வணிக அதிகாரி டெனியல் ஜக்சன் (Daniel Jackson) மற்றும் அரசியல்-பொருளாதார ஆலோசகர் அந்தணி பியர்னோட் (Anthony Pirnot) ஆகியோர் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலக குழுவை பிரதிநிதித்துவப்படுத்தியதோடு இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ஜனாதிபதியின் சிரேஸ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ மற்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கே. ஏ. விமலேந்திராஜா ஆகியோர் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.