Thursday, September 11, 2025
Your AD Here

அடுத்த ஆண்டில் மாகாண சபைத் தேர்தல் நிச்சயம் நடக்கும்.!

”நீண்டகாலம் நடத்தப்படாமல் நிலுவையில் இருக்கும் மாகாண சபைத் தேர்தல் அடுத்த ஆண்டில் நிச்சயமாக நடக்கும். அதில் எந்தச் சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை.”

இப்படி தம்மை நேரில் சந்தித்துப் பேசிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனிடம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்திருக்கின்றார்.

எனினும், தேர்தல் நடத்தும் முறைமை தொடர்பில் அரசுக்குள் குழப்பம் இருப்பது தெரியவந்திருக்கின்றது.

நேற்று நாடாளுமன்றத்துக்கு வருகை தந்திருந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை நாடாளுமன்றத்தில் உள்ள ஜனாதிபதியின் அலுவலகத்தில் சாணக்கியன் எம்.பி. தனியாகச் சந்தித்து சுமார் அரைமணி நேரம் உரையாடினார் எனத் தெரியவருகின்றது.

அந்தச் சமயத்திலேயே மாகாண சபைத் தேர்தல் அடுத்த ஆண்டில் நிச்சயமாக நடக்கும் என்று ஜனாதிபதி அநுரகுமார், சாணக்கியன் எம்.பியிடம் நேரில் உறுதி கூறினார்.

”மாகாண எல்லை நிர்ணயத்தைச் செய்து கொண்டுதான் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என்று அரசு முடிவு எடுத்திருப்பதாகக் கூறப்படுகின்றதே. அதைச் செய்து முடிப்பதாயின் நீண்ட காலம் செல்லும். அடுத்த ஆண்டிலும் மாகாண சபைத் தேர்தல் நடத்த முடியாது” – என்று சாணக்கியன் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டினார் எனத் தெரிகின்றது.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா மாகாண சபைகள் தொடர்பான தொகுதிகளின் எல்லை நிர்ணயங்கள் முடிவடைந்த பின்னர்தான் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியும் என்று அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், அத்தகைய முடிவு எதனையும் அரசு எடுக்கவில்லை என்றும், கட்சித் தலைவர்களோடு கலந்துரையாடி அது பற்றி தீர்மானிக்கப்படும் என்றும் நேற்று தம்மைச் சந்தித்த சாணக்கியனிடம் ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க கூறினார் எனத் தெரியவருகின்றது.

அத்தகைய முடிவு அரசால் எடுக்கப்பட்டிருப்பதாக ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் சபையிலும் இலங்கை அரசுத் தரப்பால் கூறப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றனவே என்று சாணக்கியன் எம்.பி. நேரடியாக ஜனாதிபதிக்குச் சுட்டிக்காட்டினார் என்றும் அறியவருகின்றது.

அப்படி இருக்காது என்ற தொனியில் பதிலளித்த ஜனாதிபதி, “மாகாண சபைத் தேர்தலை நடத்துவோம் என்பதை ஜெனிவாவுக்கு நாங்கள் தெரிவிக்கலாம். தெரிவித்துள்ளோம். ஆனால் மாகாண எல்லை நிர்ணயங்கள் பற்றிய விடயங்களின் பின்னர்தான் தேர்தல் நடத்தப்படும் என்ற தகவலை எல்லாம் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலுக்கு நாம் ஏன் தெரிவிக்க வேண்டும்?” என்று சாணக்கியனிடம் வினாவினார் எனவும் தெரியவந்தது.

ஆயினும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கைக்கு இலங்கை உத்தியோகபூர்வமாக அனுப்பிய பதிலில் மாகாண எல்லை நிர்ணயம் முடித்த பின்னர் மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்படிப் பார்த்தால், மாகாண எல்லை நிர்ணய விவகாரங்களை முடித்த பின்னர்தான் மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் என்ற அரசின் நிலைப்பாடு, அரசுத் தலைவர் ஜனாதிபதி அநுரகுமார் திஸாநாயக்கவுக்குத் தெரியாமல் அல்லது அவரது இணக்கத்தைப் பெறாமல் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலுக்கு இலங்கையின் பதிலாக அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றதா என்று கேள்வி விடயம் அறிந்த வட்டாரங்களில் எழுப்பப்படுகின்றது.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்