உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விவாதத்தை நடத்த சந்தர்ப்பம் தாருங்கள் என, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் இன்று (11) கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
சபாநாயகர் நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக முன்வைத்த விடயங்கள் குறித்து சில கருத்துக்களை முன்வைக்க வேண்டி காணப்படுகின்றன. அரசியலமைப்பின் 46 (1), ஆம் பிரிவின் பிரகாரம், தெளிவாக அமைச்சர்களை நியமிக்கும் செயல்முறையின் போது பிரதி அமைச்சர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
சம்பந்தப்பட்ட பிரதி அமைச்சர் நிறைவேற்று அதிகாரத்தை செயல்படுத்தும் நபராக இருந்து வருகிறார்.
பாராளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பும் போது அமைச்சரவை அமைச்சரின் சார்பாக பிரதி அமைச்சர் பதிலளிக்கிறார். அரசியலமைப்பின் பிரிவுகள் 46 (1) மற்றும் 46 (3) இல் நியமனம் மற்றும் நீக்கம் செய்யும் அதிகாரம் காணப்படுகின்றன என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான உண்மை யதார்த்தங்களை இந்நாட்டில் இலட்சக்கணக்கான மக்களும், கத்தோலிக்க சமூகமும், பாதிக்கப்பட்டவர்களும் என சகலரும் எதிர்பார்ததுக் கொண்டிருக்கின்றனர். சரியான தகவல், பிரதான சூத்திரதாரியாக செயல்பட்டவர் யார் என்பதைக் கண்டறிய வழிவகுக்கும் விவாதம் குறித்து பேசுகிறோம்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சார்பாகவேனும் இதுபோன்ற விவாதத்தை நடத்த சந்தர்ப்பத்தைப் பெற்றுத் தருமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (11) பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.