தோட்டத் தொழிலாளர்களுக்கான தினசரி ஊதியத்தை அதிகரிப்பது தொடர்பான யோசனை குறித்து, ஜனாதிபதி அநுர குமார திஸ்ஸாநாயக்க அவர்கள் தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் விசேட கலந்துரையாடலை நடத்தினார்.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், முந்தைய வரவுசெலவுத் திட்டத்தில் பொது மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சம்பள அதிகரிப்புகளுக்கு ஏற்ப தோட்டத் தொழிலாளர்களின் தினசரி ஊதியத்தை உயர்த்துவதற்கான முன்மொழிவில் கவனம் செலுத்தப்பட்டது என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி திஸ்ஸாநாயக்க அவர்கள், தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு வாழ்க்கை ஊதியம் கிடைப்பதை உறுதிசெய்வது மற்றும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
ஊதிய உயர்வை நடைமுறைப்படுத்துவதற்கான செயல்முறைகள் குறித்தும் அவர் நிறுவனப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.
இச்சந்திப்பின் போது, தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் தற்போது தோட்டத் துறை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விளக்கினர்.
அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, தோட்டத் துறையை மேம்படுத்தி பலப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் கொள்கையை எடுத்துரைத்ததுடன், இதற்கு அரசாங்கம் தனது முழுமையான ஆதரவை வழங்கும் என்றும் உறுதியளித்தார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.





