முல்லைத்தீவு, தண்ணிமுறிப்பு குருந்தூர்மலையில் தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடத்தை பௌத்த வரலாற்றுடனும், மகாவம்சத்துடனும் தொடர்புபடுத்தி போலியான தகவல்களைப் புனைந்துள்ள காட்சிப் பலகைகளைத் தொல்லியல் திணைக்களம் காட்சிப்படுத்தியுள்ளமைக்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வன்மையான கண்டனம் தெரிவித்துள்ளார்.
நேற்று (அக்டோபர் 15, 2025) குருந்தூர்மலைப் பகுதிக்கு நேரடியாகச் சென்று நிலமைகளை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் பார்வையிட்டார்.
நான்கு இடங்களில் புதிதாக காட்சிப்படுத்தப்பட்ட பலகைகள்:
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், “குருந்தூர்மலையில் சில விளம்பரப் பலகைகள் புதிதாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்தல் கிடைக்கப்பெற்றதன்பேரிலேயே இங்கு வருகை தந்தேன். ஏற்கனவேயும் அடிவாரத்தில் பௌத்த இடமென விவரிக்கும் பலகைகள் இருந்த நிலையில், கடந்த ஒக்டோபர் 14ஆம் திகதி புதிதாக ‘குருண்டி தொல்லியல் தளம்’ எனத் தலைப்பிடப்பட்டு, போலியான பௌத்த வரலாறு புனையப்பட்ட காட்சிப் பலகைகள் மொத்தம் நான்கு இடங்களில் நிறுவப்பட்டுள்ளன. குருந்தூர்மலை அடிவாரம், மேற்பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இவை நிறுவப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.
கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு முயற்சி:
தமிழர்களின் பூர்வீக வரலாற்றை மாற்றியமைக்கும் இத்தகைய நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்த அவர், “தொல்லியல் திணைக்களம் ஒரு கட்டமைக்கப்பட்ட தமிழ் இனவழிப்புச் செயற்பாட்டைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறது” என்று குற்றம் சாட்டினார்.
பூர்வீக வரலாறு மற்றும் ஆக்கிரமிப்பு:
“எமது தமிழ் மக்கள் இந்தக் குருந்தூர்மலையை அண்டியுள்ள தண்ணிமுறிப்புப் பகுதியில் பூர்வீகமாக வாழ்ந்துவந்ததுடன், இந்த மலையில் அமைந்திருந்த ஆதிசிவன் ஐயானாரை வழிபட்டு வந்துள்ளனர். இதுவே குருந்தூர் மலையின் உண்மையான வரலாறு.
பூர்வீகக் குடிகளாக வாழ்ந்த எமது தமிழ் மக்கள் இன்னும் தண்ணிமுறிப்புப் பகுதியில் மீளக்குடியமர்த்தப்படவில்லை.
இத்தகைய சூழலில், தமிழர்களுடைய பூர்வீக வாழிடத்தையும், குருந்தூர்மலையையும் மகாவம்சத்துடனும், பௌத்த வரலாறுகளுடனும் தொடர்புபடுத்தித் தொல்லியல் திணைக்களத்தினால் போலியான வரலாறு புனையப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
தொல்லியல் திணைக்களத்தின் பணி உண்மை வரலாறுகளைப் பதிவுசெய்வதுதானே தவிர, பௌத்தர்களுக்குச் சார்பாகப் போலியான வரலாற்றுப் புனைகதைகளை உருவாக்குவது அல்ல” என்றும் அவர் வலியுறுத்தினார்.
காணிகளை விடுவிக்க கோரிக்கை:
மேலும், “குருந்தூர்மலையைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான 300 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் தொல்லியல் திணைக்களத்தினால் அத்துமீறி ஆக்கிரமிக்கப்பட்டு எல்லைக்கற்கள் இடப்பட்டுள்ளன. இவ்வாறு திணைக்களம் பாரிய அளவில் குடியிருப்பு மற்றும் பயிர்ச்செய்கைக் காணிகளை அபகரித்து வைத்திருக்க எந்த அவசியமும் இல்லை. எனவே அந்தக் காணிகள் உடனடியாக விடுவிக்கப்பட்டு தமிழ் மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும். தண்ணிமுறிப்பில் எமது மக்கள் மீளக்குடியமர்த்தப்பட வேண்டும்” என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
சட்டவிரோத விகாரை மற்றும் தேரர் மீது கண்டனம்:
இந்தச் சட்டவிரோத ஆக்கிரமிப்புச் செயற்பாடுகளுக்குச் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைக்குப் பொறுப்பாகவுள்ள தேரரும் முழு ஆதரவுடன் செயற்படுவதாகத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், “பௌத்த துறவியாக இருப்பதற்கு அடிப்படைத் தகுதியே இல்லாத ஒருவர் இங்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார். அவருடைய அத்துமீறல்கள் மற்றும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்புச் செயற்பாடுகளுக்கு எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்” என்றார்.
இத்தகைய வரலாற்றுப் புனைவுகளூடாக மேற்கொள்ளப்படும் கட்டமைக்கப்பட்ட தமிழ் இனவழிப்புச் செயற்பாடுகள் தொடர்பில் உரியவர்களின் கவனத்திற்குக் கொண்டுவருவதுடன், அவற்றை தடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் தெரிவித்தார்.





