Thursday, April 23, 2026
Your AD Here

வல்வெட்டித்துறை IPKF படுகொலையால் பாதிக்கப்பட்டோர் 15 மில்லியன் டொலர் இழப்பீடு கோரி மனு!

கடந்த 1989ஆம் ஆண்டு இந்திய அமைதி காக்கும் படையினரால் (IPKF) நடத்தப்பட்ட வல்வெட்டித்துறை படுகொலையின் பாதிக்கப்பட்டவர்களும், உயிரிழந்தவர்களின் உறவினர்களும், தமக்கு 15 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 4.5 பில்லியன் இலங்கை ரூபா) இழப்பீடு வழங்கக் கோரி இலங்கை நஷ்டஈட்டு அலுவலகத்தில் (Office for Reparations) விரிவான மனுவொன்றைச் சமர்ப்பித்துள்ளனர்.

36 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு வெளிநாட்டு இராணுவத்தால் இலங்கையின் மண்ணில் நிகழ்த்தப்பட்ட பாரிய அட்டூழியத்துக்காக நஷ்டஈடு கோரப்படும் முதல் மனு இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்று நாள் கொடூரம்

வல்வெட்டித்துறைப் பிரஜைகள் குழுவால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், 1989ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் திகதி முதல் 4ஆம் திகதி வரையிலான மூன்று நாட்கள் நீடித்த தாக்குதலில் குறைந்தது 66 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 34 பேர் காயமடைந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயிரிழப்புக்களுக்கு மேலதிகமாக, அந்த நாட்களில் 123 வீடுகளும் 43 கடைகளும் முழுமையாக அழிக்கப்பட்டன. மேலும், 250க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்ததாகவும் அந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் பொறுப்பு வலியுறுத்தல்

இந்த முறைப்படியான மனுச் சமர்ப்பிப்பு குறித்து யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடகவியலாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில், வல்வெட்டித்துறைப் பிரஜைகள் குழுவின் பிரதிநிதி ந. ஆனந்தராஜ் உருக்கமாகக் கருத்துத் தெரிவித்தார்.

அவர் நஷ்டஈட்டு அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகத்துக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், “குற்றமிழைத்தவர்கள் வெளிநாட்டு இராணுவமாக இருப்பினும், இந்த அட்டூழியங்கள் இலங்கையின் இறைமைக்கு உட்பட்ட பிரதேசத்தில் இடம்பெற்றன. பாதிக்கப்பட்டவர்கள் இலங்கை நாட்டின் பிரஜைகள் ஆவர். எனவே, இந்தத் துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தனது சொந்த மக்களுக்கு நீதியை நிலைநாட்டி, உரிய அங்கீகாரத்தையும் நஷ்டஈட்டையும் வழங்குவதற்கான முழுப் பொறுப்பும் இலங்கை அரசாங்கத்தையே சாரும்” என்று ஆணித்தரமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

சாட்சியங்களுடன் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணம்

ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 19) நடைபெற்ற இந்த நிகழ்வில், பாதிக்கப்பட்ட குடும்பங்களும், உயிர் பிழைத்தவர்களும் கூடி, படுகொலையில் உயிரிழந்தவர்களின் நினைவாக சுடரேற்றி, மலரஞ்சலி செலுத்தினர்.

நஷ்டஈடு கோரும் மனுவின் பிரதியும், நேரில் கண்ட சாட்சியங்களின் வாக்குமூலங்கள் அடங்கிய அறிக்கையும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனிடமும் கையளிக்கப்பட்டது. 36 வருடங்களாகத் துயரத்தைத் தாங்கி வாழும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி எப்போது கிடைக்கும் என்ற ஏக்கம் இந்தப் பகுதியில் நிலவுகிறது.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்