நுவரெலியா பகுதியில் ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை நடத்துவதற்காக பாதாள உலகக் கும்பல், வெளிநாட்டவர்களை அழைத்து வந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். பாதாள உலகக் குழுத் தலைவரான ‘கேஹெல்பத்தர பத்மே’ இதற்கு நிதியுதவி செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
நேற்று (04) காலை, சினமன் கார்டன் பொலிஸ் நிலையத்தின் புதிய கட்டிடத் திறப்பு விழாவில் உரையாற்றிய அமைச்சர், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கண்டுபிடிக்கப்பட்ட தகவலின்படி, இரண்டு பாகிஸ்தான் பிரஜைகள் இந்த ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர் எனக் குறிப்பிட்டார்.
நுவரெலியாவில் ஐஸ் (Crystal methamphetamine – ICE) போதைப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பாதாள உலகக் குழுத் தலைவர் ‘கேஹெல்பத்தர பத்மே’ முதலீடு செய்துள்ளதாக பொலிஸார் கண்டுபிடித்ததை அடுத்து, குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.
விசாரணையின்போது, பத்மசிறி எனப்படும் பத்மே, இந்த சட்டவிரோத நடவடிக்கையில் 40 இலட்சம் ரூபாய்க்கு மேல் முதலீடு செய்துள்ளதாக ஒப்புக்கொண்டார்.
போதைப்பொருள் தயாரிப்பு வசதிக்காக நுவரெலியாவில் ஒரு வீடு வாடகைக்கு எடுக்கப்பட்டதாகவும், இதற்காக 2,000 கிலோகிராமிற்கு அதிகமான இரசாயனப் பொருட்கள் நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்டதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
சமீபத்தில் கைது செய்யப்பட்ட குழு உறுப்பினர்களின் வாக்குமூலங்கள், அரசியல்வாதிகளுக்கும் குற்றவியல் வலையமைப்புகளுக்கும் இடையிலான நீண்டகால தொடர்புகளை வெளிப்படுத்தியுள்ளதாகவும், இது குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவு விரிவான விசாரணை நடத்தும் என்றும் அவர் கூறினார்.