நாட்டின் வட, கிழக்கு மாகாணங்களில் நிலவும் காணிப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் நோக்கிலான விசேட செயற்திட்டமொன்று சர்வதேச புலம்பெயர்வு அமைப்பின் அனுசரணையுடன் ஐக்கிய நாடுகள் சபையினால் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களில் நிலங்களுக்கான எல்லை நிர்ணயம், படையினரால் கையகப்படுத்தப்பட்டிருக்கும் தனியார் காணிகள், அரச கட்டமைப்புக்கள் உள்ளிட்ட ஏனைய தரப்பினரால் பல்வேறு வடிவங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் காணி சுவீகரிப்புக்கள் என்பன உள்ளடங்கலாக காணி சார்ந்த பல்வேறு பிரச்சினைகள் சமகாலத்தில் இன்னமும் தீர்க்கப்படாமல் உள்ளன.
இப்பிரச்சினைகளுக்கு சுமுகமானதும், நியாயமானதுமான முறையில் தீர்வுகாணும் நோக்கில் சர்வதேச புலம்பெயர்வு அமைப்பின் (ஐ.ஓ.எம்.) அனுசரணையுடன் ஐக்கிய நாடுகள் சபையினால் விசேட செயற்திட்டமொன்று தயாரிக்கப்பட்டு வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியமுடிகிறது.
அத்தோடு இச்செயற்திட்டத்தின்கீழ் அரச கட்டமைப்புக்கள், பாதுகாப்புத் தரப்பினர், சிவில் சமூக அமைப்புக்கள், படையினர் வசமுள்ள தனியார் காணிகளின் உரிமையாளர்கள் உள்ளடங்கலாக இவ்விவகாரத்துடன் தொடர்புடைய சகல தரப்பினரும் உள்வாங்கப்படுவர் எனவும் தெரியவருகிறது.
மேலும் இச்செயற்திட்டத்தின் ஊடாக வட, கிழக்கில் காணிப் பிரச்சினைகளுடன் தொடர்புடைய தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தல், படையினர் வசமுள்ள தனியார் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல், எல்லைகளை உரியவாறு மீள்நிர்ணயிப்பதற்கு அவசியமான தொழில்நுட்ப ஒத்துழைப்புக்களை உள்ளகக் கட்டமைப்புக்களுக்கு வழங்கல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.