யாழ்ப்பாணம் – வலி.வடக்கில் பலாலி வீதியின் கிழக்கே தனியாருக்கு சொந்தமான காணியில் இராணுவ வைத்தியசாலை அமைக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தக் கட்டுமானப் பணிகள், வசவிலான் மணம்பிராய் பிள்ளையார் கோயில் பகுதி உட்பட சுமார் ஏழு ஏக்கர் பரப்பளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து தனியார் காணிகளை உள்ளடக்கிய இந்த திட்டத்திற்காக, அருகிலுள்ள இடங்கள் ஏற்கனவே விடுமுறையில் வரும் இராணுவ வீரர்களின் தங்குமிடமாகப் பயன்படுத்தப்படுகின்றன.
கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக, இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தமது காணிகளை இராணுவத்திடம் இருந்து மீளப் பெறுவதற்காக பிரதேச மற்றும் மாவட்ட செயலகங்கள், அத்துடன் ஜனாதிபதி செயலகம் வரையில் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
எனினும், இராணுவம் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தபோது உறுதியளித்த போதிலும், தனியார் காணியில் இராணுவ வைத்தியசாலை அமைக்கும் இந்த நடவடிக்கை, அரசாங்கத்தின் வாக்குறுதி தொடர்பில் மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.