இலங்கை-சுவிட்சர்லாந்து இராஜதந்திர உறவுகளின் 70ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சுவிட்சர்லாந்து தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆய்வு மாநாட்டில் பங்கேற்க நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அழைக்கப்பட்டுள்ளார்.
இலங்கை–சுவிட்சர்லாந்து நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாடு, எதிர்வரும் செப்டெம்பர் 14ஆம் திகதி சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ளது.
இலங்கையின் அரசியலமைப்பு சீர்திருத்தங்களுக்குத் தயாராகி வரும் நிலையில், இலங்கையின் அரசியல்வாதிகளுக்கு சுவிஸ் அரசியல் அமைப்பு முறைமை குறித்து ஆழமான, நேரடி அனுபவங்களைப் பெறுவதற்கும், கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதற்கும் இந்த நிகழ்வு ஒரு வாய்ப்பை வழங்கும் என தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் சுமார் 13 இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மட்டுமே தமிழ் பிரதிநிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.