வீதி விபத்துக்களை தடுக்கும் முகமாக கனரக வாகன சாரதி மற்றும் உரிமையாளர்களுக்கான விசேட விழிப்பூட்டல் நடவடிக்கை வீதி விதிமுறைகள் தொடர்பில் தெளிவூட்டும் விழிப்புணர்வு நிகழ்வு இன்று(5) சம்மாந்துறை பொலிஸ் நிலைய வளாகத்தில் நடைபெற்றது.
இதன் போது சம்மாந்துறை பொலிஸ் நிலைய பிரிவிற்குள் உள்ளடங்கும் வகையில் மண் செங்கல் கருங்கல் கொங்கிறீட் கற்கள் ஏற்றி இறக்கும் வாகனங்கள் வாடகை அடிப்படையில் பொருட்களை ஏற்றி இறக்கும் வாகனங்களின் தரங்கள் அதன் குறைபாடுகள் என்பன இனங்காணப்பட்டு அவற்றை நிவர்த்தி செய்வதற்காக காலஅவகாசம் வாகன சாரதி மற்றும் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது.
அத்துடன் பொலிஸ் நிலைய வளாகத்தில் பாடசாலை வேளையில் எவ்வாறு கனரக வாகன சாரதிகள் செயற்படுவது மக்கள் செறிந்து வாழும் பகுதியில் எவ்வாறு சாரதியம் செய்வது போன்ற விடயங்களை சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத் தெளிவாக குறிப்பிட்டார்.இதன் போது வீதி ஒழுங்கு முறைகளை அறிந்து கொள்வதன் ஊடாக வீதி விபத்துகளை தடுக்க முடியும்.அத்துடன் கனரக வாகனத்தை பயன்படுத்தி அனுமதி பெற்ற இடத்தை விட்டு மற்றுமொரு அனுமதி பெறப்படாத இடத்தில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவது அவற்றை ஊக்குவித்து பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்களின் அனுமதி பத்திரம் உடனடியாக தடை செய்யப்படும் எனவும் வீதிப் போக்குவரத்து வாகன விபத்துக்களைக் கட்டுப்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.
மேலும் பொலிஸ் நிலைய வளாகத்திற்கு வருகை தந்த வாகனங்களின் குறைபாடுகளினை சுட்டிகாட்டி விபத்துக்கள் ஏற்பட இவ்வாறான குறைபாடுகளும் காரணம் என சாரதிகள் உரிமையாளர்களுக்கு விளக்கமளித்தார்.ஆகவே வீதி போக்குவரத்து வாகன விபத்துக்களைக் கட்டுப்படுத்தி மாணவர்கள் உட்பட அனைத்து பயணிகளதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்னெடுக்கப்படும் இவ்வேலைத்திட்டங்களுக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் நல்க வேண்டும். அதுவே அனைவரதும் எதிர்பார்ப்பாகும் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத் குறிப்பிட்டார்
இந்த நிகழ்வானது கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தர ஆலோசனையில் அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல வழிகாட்டலில் அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் டி.பி.எச். கலனசிறி நெறிப்படுத்தலில் அம்பாரை மாவட்ட கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் ஒழுங்கமைப்பில் பிரதம பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.எம்.நௌபர் உட்பட போக்குவரத்து பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.










