அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகள் மற்றும் அவசர காலங்களில் நவீன தொழிநுட்பங்களை, குறிப்பாக ரோன் (Drone) தொழிநுட்பத்தை, உயிர்காப்பு நோக்கில் பயன்படுத்துவது தொடர்பாக ஒரு நாள் செயல்விளக்கம் மற்றும் பயிற்சி நெறி, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 2025.09.04 ஆம் திகதி கலை கலாச்சார பீட உள்ளக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வை சம்மாந்துறை அல்-உஸ்வா உயிர்காப்பு நிலையம் மற்றும் அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. இது, அல் உஸ்வா இஸ்லாமிக் அமைப்பின் தலைவர் மற்றும் அல் உஸ்வா மகளிர் அரபுக் கல்லூரியின் செயலாளர் அல்ஹாஜ் ஐ.எல்.எம். முஸ்தபா மௌலவியின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்பட்ட 20ஆவது பயிற்சி வகுப்பாகும்.
நிகழ்வு, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைடீன் அவர்களின் அனுமதியுடன், புவியியல் துறைத்தலைவர் கலாநிதி ஐ.எல். முகம்மட் சாகிர் முன்னின்று வழிநடத்தினார்.
நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியவர்களில், கலை கலாச்சார பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸில், அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சி. றியாஸ், சிரேஷ்ட பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ், அல்ஹாஜ் ஐ.எல்.எம். முஸ்தபா மௌலவி, கலாநிதி ஐ.எல். முகம்மட் சாஹிர் ஆகியோர் தங்களது பார்வைகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து, பயிற்சியாளர்களை உற்சாகப்படுத்தினர்.
அனர்த்தங்களில் ஏற்படும் உயிரிழப்புகளை குறைத்து, மீட்பு நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள ரோன் தொழிநுட்பத்தின் பங்கு பற்றி அனைவரும் வலியுறுத்தினர். புதிய தலைமுறையினர் இந்த தொழிநுட்பங்களை கையாளும் திறனுடன் உருவாக வேண்டும் என்பதும் அவர்களது உரைகளில் பிரதிபலித்தது.
நிகழ்வின் தொழில்நுட்ப அம்சங்களை சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எச்.எம். றினோஸ் மற்றும் விரிவுரையாளர் ஏ.எல். ஐயூப் ஆகியோர் நேரடியாக விளக்கினார்கள். அவர்கள் ரோன் இயந்திரங்களின் செயல்பாடு, அவற்றின் வழியாக தரவுகளைத் திரட்டும் முறைகள், மெய்நிகர் வரைபட தயாரிப்பு, மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் அவற்றின் முக்கிய பங்கு உள்ளிட்ட விடயங்களை விளக்கினர்.
தென்கிழக்குப் பல்கலைக்கழக நூலகர் எம்.எம். றிபாவுடீன் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் நிகழ்வில் கலந்து கொண்டு பயிற்சியாளர்களுக்கு உற்சாகம் அளித்தனர்.
இந்த நிகழ்வு, எதிர்கால அனர்த்தங்களுக்கு தயாராக இருக்க உதவிக்கரம் நீட்டும் முக்கிய நடவடிக்கையாகவே கொள்ளப்பட்டது. உயிரியற்காப்பு நடவடிக்கைகள் ஒரு தொழில்நுட்ப அடிப்படையிலான புதிய கட்டத்திற்கு நகரும் இந்நேரத்தில், இத்தகைய பயிற்சி வகுப்புகள் சமூகத்தை பாதுகாக்கும் பரந்த இலக்குடன் நடைபெறுவது வரவேற்கத்தக்கதாகும்.








