மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவினரால் நேற்று (5) மித்தெனிய, தலாவவிலுள்ள காணி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், சுமார் 50,000 கிலோகிராம் ‘ஐஸ்’ (மெத்தம்பேட்டமைன்) தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த இரசாயனப் பொருட்கள், இரண்டு பாகிஸ்தானிய பிரஜைகளின் உதவியுடன் நுவரெலியாவில் ‘ஐஸ்’ தயாரிப்பதற்காக ஒரு வீட்டை முன்னர் வாடகைக்கு எடுத்திருந்த கேஹெல்பத்தார பத்மேயினால் நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
“பெக்கோ சமன்” என அறியப்படும் சந்தேகநபர் ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அங்கரக்கொலபெலஸ்ஸவில் முன்னாள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பிரதேச சபை உறுப்பினரான சம்பத் மனம்பேரி மற்றும் பியால் மனம்பேரி ஆகிய இரு சகோதரர்கள் இந்த இரசாயனப் பொருட்களை பதுக்கி வைத்திருந்ததாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற விசாரணைக் குழுவினர், பொலிஸ் விசாரணைகள் குறித்து தகவல் கிடைத்ததையடுத்து, சந்தேகநபர்கள் இந்த இரசாயனக் குப்பைகளை வாகனம் ஒன்றில் கொண்டு சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது அதன் பின்னர் சகோதரர்கள் இருவரும் தப்பியோடியுள்ளனர்.
மீட்கப்பட்ட இரசாயனப் பொருட்களின் மூலம் சுமார் 200 கிலோகிராம் ஐஸ் தயாரிக்க முடியும் என்றும், அதன் மதிப்பு சுமார் 2 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.