ஹெஹல்பத்தார பத்மேயுடன் தொடர்புடைய இரசாயனப் பொருள், இந்த ஆண்டு ஜனவரி மாதம் விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் மூலம் நாட்டிற்குள் கடத்தி வரப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) நுவரெலியாவில் ஹெஹல்பத்தார பத்மேயினால் நடத்தப்பட்ட ‘ஐஸ்’ (மெத் கிறிஸ்டல்) போதைப்பொருள் தொழிற்சாலை 4ஆம் திகதி சீல் வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அதிகாரிகள் மித்தெனியாவில் புதைக்கப்பட்டிருந்த இரசாயனப் பொருட்களைக் கண்டுபிடித்து கைப்பற்றினர். இந்த இரசாயனங்கள் ஜனவரி மாதம் இரண்டு கொள்கலன்கள் மூலம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், சுங்கத் திணைக்களத்தால் ஜனவரி 29ஆம் திகதி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களில் ஒன்றின் மூலம் இந்த பொருட்கள் நாட்டிற்குள் கடத்தி வரப்பட்டதா என சுயாதீன ஊடகவியலாளரான தரிந்து உடுவரகெதர கேள்வி எழுப்பியுள்ளார்.
இறக்குமதி செய்யும் நிறுவனங்களால் வழங்கப்பட்ட தகவல்களை மட்டுமே சுங்கம் வெளியிட்டதால், அந்த கொள்கலன்களில் உண்மையில் என்ன இறக்குமதி செய்யப்பட்டது என்பது யாருக்கும் உறுதியாகத் தெரியவில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.