பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இலங்கையில் புதிய செயற்கை நுண்ணறிவு இணையத்தளம் (aigov.lk) மற்றும் பயணிகளுக்கு வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பஸ் கட்டணத்தைச் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர், இந்த முன்முயற்சிகளுக்கு நாட்டின் டிஜிட்டல் மாற்றத்தை துரிதப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தேசிய முயற்சியான டிஜிட்டல் பொருளாதார மாதம் அடிக்கோலிடுவதாக கூறினார்.
செப்டம்பர் மாதம் டிஜிட்டல் பொருளாதார மாதமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இது டிஜிட்டல் கருவிகள் குறித்த பொதுமக்களின் விழிப்புணர்வை அதிகரிப்பதுடன், எதிர்காலத்திற்கான டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்குவதில் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது. இந்த மாதத்தில் பொதுமக்கள் கண்காட்சிகள், விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் கொள்கை கலந்துரையாடல்கள் போன்ற நடவடிக்கைகள் இடம்பெறும்.
தற்போதைய டிஜிட்டல் திட்டங்கள் குடிமக்கள் மற்றும் வணிகங்களுக்கு நேரடி நன்மைகளைத் தரும் என அரசாங்கம் எதிர்பார்க்கிறது. 2030 ஆம் ஆண்டளவில், டிஜிட்டல் பொருளாதாரம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பங்களிக்கும் எனவும், டிஜிட்டல் ஏற்றுமதியில் இருந்து 5 பில்லியன் அமெரிக்க டொலர்களும், 200,000 பணியாளர்களும் உருவாகுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.